பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

493


திரையைக் கிழித்தெறிந்து, அவர்களது அந்தரங்க உணர்ச்சியை வெளிக் கிளப்பிவிட்டுவிட்டான். அவர்கள் ஒருவருக்கொருவர் குசுகுசுத்துப் பேசினார்கள்; முகத்தை விகாரமாகக் கோணிக்கொண்டார்கள்; நிலைகொள்ளாமல் துறுதுறுத்தார்கள்.

“நீங்கள் மக்களை உளவாளிகளாகப் பழக்கிவிடுகிறீர்கள்; இளம் யுவதிகளையும் பெண்களையும் கெடுக்கிறீர்கள்; மனிதர்களைத் திருடர்களாகவும் கொலைகாரர்களாகவும் மாற்றிவிடுகிறீர்கள்: மதுபானத்தால் மக்களை விஷமூட்டிக் கொல்கிறீர்கள். சர்வதேச யுத்தங்கள், பொய் பித்தலாட்டங்கள், விபசாரம், காட்டுமிராண்டித்தனம் -இதுதான் உங்கள் நாகரிகம். இந்த மாதிரியான நாகரிகத்துக்கு நாங்கள் எதிரிகள்!”

“நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்......” என்று சத்தமிட்டார் அந்தக் கிழவர். ஆனால் சமோய்லவோ முகம் சிவக்க, கண்கள் பிரகாசிக்க எதிர்த்துச் சத்தமிட்டான்:

“நீங்கள் எந்த மக்களைச் சிறையிலே தள்ளி நாசப்படுத்துகிறீர்களோ, பைத்தியம்பிடிக்கச் செய்கிறீர்களோ அந்த மக்கள் குலத்தின் நாகரிகத்தைத்தான் நாங்கள் மதிக்கிறோம்; ஆதரிக்கின்றோம்; கெளரவிக்கிறோம்!...”

“பேசியது போதும்; சரி. அடுத்தது —பியோதர் மாசின்!”

பியோதர் முள் குத்தியதுபோலத் துள்ளியெழுந்து நிமிர்ந்து நின்றான்.

“நான்— நான் சத்தியம் செய்கிறேன். நீங்கள் எங்கள்மீது ஏற்கெனவே தீர்ப்புச் செய்துவிட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும்” என்று அவன் மூச்சுத் திணறிக்கொண்டே சொன்னான். அவனது கண்களைத் தவிர முகம் முழுவதும், வெளிறிட்டுப்போனதாகத் தோன்றியது. அவன் தன் கையை நீட்டி உயர்த்திக்கொண்டே கத்தினான்: “நான் ஆணையிட்டுச் சொல்லுகிறேன். நீங்கள் என்னை எங்கெங்கு அனுப்பினாலும் சரி, அங்கிருந்து நான் எப்படியாவது தப்பிவந்து என் சேவையை என்றென்றும், என் வாழ்நாள்பூராவும் தொடர்ந்து நடத்துவேன். இது சத்தியம்!”

சிஸோவ் உரத்து முனகிக்கொண்டே, தன் இருப்பிடத்தைவிட்டு அசைந்து உட்கார்ந்தான். ஜனக்கூட்டத்திடையே ஒரு விசித்திரமான முணுமுணுப்பு எதிரொலித்து. அது திக்பிரமையுணர்ச்சியில் கலந்து அமிழ்ந்தது. ஒரு பெண் பொருமிக் குமுறியழுதாள்; யாரோ திடீரென இருமலுக்கு ஆளாகிப் புகைந்தார்கள். போலீஸ்காரர்கள் கைதிகளை மங்கிய வியப்புணர்ச்சியோடு பார்த்தார்கள்; ஜனங்களைக் கோபத்தோடு