பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

மக்சிம் கார்க்கி

”...அதற்கு, வாழ்க்கையை அவர்கள் எப்படித் தொடங்கினார்கள் என்று பார்க்க வேண்டும்...”

“நன்றாய்ப் பாருங்கள். கண்மணிகளே, நன்றாய்ப் பாருங்கள்” என்று தேநீர் தயாரித்தபடி சொன்னாள் தாய்.

எல்லோரும் மௌனமானார்கள்.

“நீ என்ன சொல்கிறாய் அம்மா!” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டான் பாவெல்.

“என்னவா?” அவள் ஒரு பார்வை பார்த்தாள். எல்லோரும் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டாள். “என்னவோ நான் எனக்குள் பேசிக்கொண்டேன்”. என்று குழறினாள் அவள்: “நீங்கள் நன்றாய்ப் பாருங்கள் என்று சொன்னேன்”.

நதாஷா சிரித்தாள். பாவெல் உள்ளுக்குள் கிளுகிளுத்தான்.

“தேநீருக்கு நன்றி, அம்மா!” என்றான் ஹஹோல்.

“தேநீரைக் குடித்துவிட்டு நன்றி சொல்லுங்கள்” என்றாள் அவள்.பிறகு தன் மகனை லேசாகப் பார்த்துவிட்டு, “நான் உங்களுக்கு இடைஞ்சலாக நிற்கிறேனா?’ என்று கேட்டாள்.

“விருந்து கொடுக்கிற நீங்கள் விருந்தாளிகளான எங்களுக்கு எப்படி இடைஞ்சலாக இருக்க முடியும்?” என்று பதிலளித்தாள் நதாஷா “எனக்குக் கொஞ்சம் தேநீர் கொடுங்கள். உடலெல்லாம் ஒரேயடியாக நடுங்குகிறது; கால்கள் ஐஸ் போலவே! குளிர்ந்துவிட்டன” என்று ஒரு குழந்தையைப் போலப் பரிதாபமாகக் கேட்டாள் அவள்.

“இதோ. இதோ” என்று அவசர அவசரமாகக் கத்தினாள் தாய்.

நதாஷா தேநீரைப் பருகிய பின்னர், உரக்க பெருமூச்சுவிட்டாள்; அவளது சடையைத் தோள் மீது இழுத்துப் போட்டுக்கொண்டு, தன் கையிலிருந்த மஞ்சள் அட்டை போட்ட படங்கள் நிறைந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள், நேநீரை ஊற்றும் போதும். பாத்திரங்களை அகற்றும் போதும் சத்தமே உண்டாகாதபடி. பதனமாகப் பரிமாறிக் கொண்டிருந்த தாய், நதாஷா வாசிப்பதையும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளது மணிக்குரல், கொதிக்கும் நேநீர்ப் பாத்திரத்தின் ஆவி இரைச்சலின் மங்கிய ரீங்காரத்தோடு இணைந்து முயங்கி ஒலித்தது: ஒரு காலத்தில் குகைகளில் வாழ்ந்து, கற்களைக் கொண்டு வேட்டையாடிய காட்டுமனிதர்களைப் பற்றிய அழகான கதைகள் சங்கிலித் தொடர்போலப் பிறந்து கட்டுலைந்து விரிந்து, அந்த அறை முழுவதும் நிரம்பி ஒலி செய்ய ஆரம்பித்தன. இந்தக் கதைகளெல்லாம் தாய்க்குப் பாட்டி கதையைப் போல் இருந்தன. அவள் தன் மகனையே பார்த்துக்