பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

503


"தோழர்களே! ருஷ்ய மக்களைக் கொன்று குலைத்துத் தின்று தீர்க்கும் ராட்சச மிருகம் இன்று மீண்டும் தனது பேராசை நிறைந்த பற்களைத் திறந்து மூடியது.....”

“அம்மா நாம் போகலாமே” என்றான் சிஸோவ்.

இந்தச் சமயத்தில் சாஷா அங்கு வந்து சேர்ந்தாள். அவள் வந்தவுடன் தாயின் கரத்தைப்பற்றிப் பிடித்து அவளைத் தெருவின் அடுத்த பக்கமாக அழைத்துக்கொண்டு போனாள்.

“அவர்கள் ஏதாவது கலாட்டா செய்வதற்கு முன், அல்லது யாரையேனும் கைது செய்யத் தொடங்குமுன் வந்துவிடுங்கள்” என்றாள் அவள். “சரி, தேசாந்திர சிட்சையா? சைபீரியாவுக்கா?”

“ஆமாம். ஆமாம்.”

“அவன் எப்படிப் பேசினான்? ஆனால் எனக்குத் தெரியும். அவன்தான், அவர்கள் அனைவரிலும் எளிமை நிறைந்தவன். எல்லோரைக் காட்டிலும் உறுதி வாய்ந்தவன்; ஆனால் அவன் ரொம்பக் கண்டிப்பான பேர்வழிதான்; இயற்கையில் அவன் நுண்ணிய உணர்ச்சியுள்ளவன். மென்மையானவன் ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ள வெட்கப்படுகிறான். அவளது காதல் வார்த்தைகள் ஆர்வங் கலந்து, உணர்ச்சிவேகத்தோடு வந்தன; எனவே அந்த வார்த்தைகள் தாயின் மனத்துக்கு அமைதியைத் தந்தன; பதிய பலத்தைத் தந்தன.

“நீங்கள் அவனோடு போய் எப்போது சேரப்போகிறீர்கள்?” என்று சாஷாவின் கரத்தை அன்போடு பற்றிக்கொண்டு கேட்டாள் தாய்.

“என் வேலையை யாராவது ஏற்றுக்கொண்டவுடனேயே!” என்று தன்னம்பிக்கையோடு முன்னோக்கிப் பார்த்தவாறே கூறினாள் சாஷr: “நானும் ஒரு தண்டனையை எதிர்நோக்கித்தான் இருக்கிறேன், அனேகமாக, அவர்கள் என்னையும் சைபீரியாவுக்குத்தான் அனுப்புவார்கள். அப்படிச் செய்தால், அவனை அனுப்பிய இடத்துக்கே என்னையும் அனுப்பும்படி நான் கேட்டுக்கொள்வேன்.”

“அப்படி நீங்கள் போனால், என் அன்பை அவனிடம் போய்ச் சொல்லுங்கள்” என்று சிஸோவின் குரல் இடையில் ஒலித்தது; சிஸோவிடமிருந்து வருவதாக மட்டும் சொல்லுங்கள். அது போதும். அவனுக்கு என்னைத் தெரியும், பியோதர் மாசினின் மாமன் என்று தெரியும். சாஷா திரும்பினாள். தன் கரத்தை நீட்டினாள்.

“எனக்கு பியோதரைத் தெரியும், என் பெயர் சாஷா.”

“உங்கள் தந்தைவழிப் பெயர்?”