பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

508

மக்சீம் கார்க்கி


நீங்களும் இவளுடனேயே போகலாமே. இரண்டுபேரையும் ஒரே சமயத்தில் பின் தொடர்வதென்பது அவர்களுக்குச் சிரமம், இதனால் இப்போதே போவது நல்லது.”

“சரி” என்றாள் தாய். “இதோ நான் உடுப்பு மாற்றிக் கொள்கிறேன்.”

அவள் நிகலாயையே கவனத்தோடு பார்த்தாள். ஆனால் அவனது அன்பும் ஆதரவும் நிறைந்த முகத்தில் ஏதோ ஒரு ஆத்திரம் பதைபதைப்புத்தான் லேசாகத் திரையிட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனிடம் எந்தக் கலவரக் கலக்க உணர்ச்சியும் காணோம். மற்றவர்களையெல்லாம்விட, தனக்கு மிகவும் அருமையானவனாய்ப் போய்விட்ட அவனிடம் எந்தவித உத்வேகப் பரபரப்புக் குறிகளும் காணப்படவில்லை. அவன் எப்போதும் யாரிடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் பழகி வந்தான். எல்லோரிடமும் அன்போடும் நிதான புத்தியோடும், ஒட்டாமலும்தான் பழகி வந்தான். மற்றவர்களது வாழ்க்கைக்கெல்லாம் மேலானதாக விளங்கும் எதோ ஒரு அந்தரங்க வாழ்க்கையை அவன் தனக்குத்தானே வாழ்ந்து வந்தான். இன்றும் அவன் அப்படியேதான் இருந்தான். மற்றவர்களிடம் அவன் பழகுவதைவிட, தாயிடமே அவன், மிகவும் ஒட்டுறவோடு நெருங்கிப் பழகினான் என்பதும் தாய்க்குத் தெரியும். அவனை அவள் நேசித்தாள். தன்னைத்தானே நம்ப முடியாத ஒரு பாசத்தால் அவனை நேசித்தாள். இப்போதும் அவள் அவனுக்காகக் கொண்ட அனுதாப உணர்ச்சியை அவளால் தாங்க முடியவில்லை. ஆனால் அவள் அதை வெளிக் காட்டிக்கொள்ளவும் துணியவில்லை. வெளிக்காட்டிக்கொண்டால் அவன் ஒரு வேளை கலக்கமுற்று குழம்பக்கூடும் என அஞ்சினாள். அப்படி அவன் குழம்பினால், அவன் வழக்கம்போலச் சற்று வேடிக்கையானவனாகத் தெரியக்கூடும் என்று அவளுக்குத் தோன்றியது, அவனை அந்தக் கோலத்தில் பார்க்க அவள் விரும்பவில்லை.

அவள் மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். நுழைந்த போது நிகலாய் சாஷாவின் கையைப்பற்றிப் பிடித்தவாறு பேசிக்கொண்டிருந்தான்.

“அபாரம்! அவனுக்கும் உங்களுக்கும் அது ஒரு நல்ல காரியம்தான் என்பது எனக்கு நிச்சயம். தனி நபரின் ஒரு சிறு சொந்தச் சுகத்தால், யாருக்கும் எந்தக் கெடுதலும் விளையப்போவதில்லை. தயாராகி விட்டீர்களா, நீலவ்னா ?”

அவன் அவளருகே வந்தான். புன்னகை புரிந்தவாறே தன் மூக்குக் கண்ணாடியைச் சரியாக்கிக்கொண்டான்.