பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

511


ஆனால் அங்கு எதுவுமே வழக்கத்துக்கு மாறாக இருப்பதாகத் தெரியவில்லை. தெருவை நோக்கியிருக்கும் மூன்று ஜன்னல்கள், ஒரு சோபா, ஒரு புத்தக அலமாரி, ஒரு மேஜை, சில நாற்காலிகள். ஒரு படுக்கை, அதற்கருகே ஒரு மூலையில் கை கழுவும் பாத்திரம் இருந்தது. இன்னொரு மூலையில் அடுப்பு இருந்தது. சுவர்களில் புகைப்படங்கள் தொங்கின. அங்குள்ள எல்லாப் பொருள்களுமே சுத்தமாகவும், புத்தம் புதிதாகவும் நல்ல நிலைமையிலும் ஒழுங்காக இருந்தன; இவை எல்லாவற்றின் மீதும், அந்த வீட்டுக்காரியான லுத்மீலாவின் சன்னியாசினி நிழல் படிந்திருந்தது. அங்கு ஏதோ ஒளிந்து மறைந்துகொண்டிருப்பதாக உணர்ந்தாள் தாய். ஆனால் எது எங்கே ஒளிந்து பதுங்கியிருக்கிறது என்பதைத்தான் அவளால் ஊகிக்க முடியவில்லை. அவள் கதவுகளைப் பார்த்தாள், அவற்றில் ஒரு கதவு வழியாகத்தான்; சிறு நடை வழியிலிருந்து! இந்த இடத்திற்கு வந்தாள். அடுத்தபடியாக, அடுப்பிருந்த பக்கத்தில் ஓர் உயரமான குறுகலான கதவு காணப்பட்டது.

“நான் இங்கு ஒரு காரியமாக வந்திருக்கிறேன்” என்று தன்னையுமறியாமல் சொன்னாள் தாய்; அதே சமயம் லுத்மீலாவும் தன்னையே கூர்ந்து கவனித்துக்கொண்டிருப்பதையும் அவள் கண்டாள்.

“தெரியும். என்னைத் தேடி வருபவர்கள் சும்மா வருவதில்லை.”

லுத்மீலாவின் குரலில் ஏதோ ஒரு விசித்திர பாவம் தொனிப்பதாகக் கண்டறிந்தாள் தாய். அவளது முகத்தைக் கவனித்தாள். அந்தப் பெண்ணின் மெல்லிய உதடுகளின் ஓரத்தில் ஒரு வெளுத்த புன்னகை அரும்புவதையும், அவளது மூக்குக் கண்ணாடிக்குப் பின்னால், அவளது உணர்ச்சியற்ற கண்கள் பிரகாசிப்பதையும் அவள் கண்டாள். தாய் வேறொரு பக்கமாகப் பார்த்துக்கொண்டு பாவெலின் பேச்சின் நகலை நீட்டினாள்.

“இதோ. இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அச்சேற்றியாக வேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்.”

பிறகு அவள் நிகலாய்க்கு நேரவிருக்கும் கைது விஷயத்தைப் பற்றிச் சொன்னாள்.

லுத்மீலா ஒன்றும் பேசாமல் அந்தக் காகிதத்தைத் தன் இடுப்புக்குள் செருகிக்கொண்டு, கீழே உட்கார்ந்தாள். அடுப்புத்தீ அவளது மூக்குக் கண்ணாடியில் பளபளத்துப் பிரகாசித்தது. நெருப்பின் அனல் அவளது அசைவற்ற முகத்தில் களித்து விளையாடியது.

“அவர்கள் மட்டும் என்னைப் பிடிக்க வந்தால், நான் அவர்களைச் சுட்டே தள்ளிவிடுவேன்” என்று தாய் கூறியதையெல்லாம் கேட்டுவிட்டு