பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

514

மக்சீம் கார்க்கி


அவள் தன் சோபாவிலிருந்து நாசூக்காக எழுந்திருந்தாள். படுக்கையருகே வந்து, தாயின் பக்கமாகக் குனிந்தாள். அந்தப் பெண்ணின் ஒளியற்ற கண்களில் ஏதோ ஒரு பாசமும் பரிவும் கலந்து, தனக்குப் பரிச்சயமான உணர்ச்சி பாவம் பிரதிபலிப்பதைத் தாய் கண்டாள்.

“உங்களை எழுப்புவது தப்பு என்று பட்டது. ஒரு வேளை இன்பக் கனவு கண்டுகொண்டிருந்தீர்களோ.”

“நான் கனவு காணவில்லை.”

“எல்லாம் ஒன்றுதான். எப்படியானாலும் நான் உங்கள் புன்னகையை விரும்பினேன். அது அத்தனை அமைதியோடு அழகாக இருந்தது..... உள்ளத்தையே கொள்ளைகொண்டது.”

லுத்மீலா சிரித்தாள், அந்தச் சிரிப்பு இதமும் மென்மையும் பெற்று விளங்கியது.

“நான் உங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். உங்கள் வாழ்க்கை என்ன, சிரமமான வாழ்க்கையா?”

தாயின் புருவங்கள் அசைந்து நெளிந்தன; அவள் அமைதியாகத் தன்னுள் சிந்தித்தாள்.

“ஆமாம். சிரமமானதுதான்” என்றாள் லுத்மீலா.

“எனக்கு அப்படி ஒன்றும் தெரியாது” என்று மெதுவாய்ப் பேசத் தொடங்கினாள் தாய். “சமயங்களில் இந்த வாழ்க்கை சிரமமாகத்தான் தோன்றுகிறது. ஆனால் இந்த வாழ்க்கைதான் பூரணமாயிருக்கிறது. இந்த வாழ்வின் சகல அம்சங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையாயும் வியப்பு தருவனவாயும் இருக்கின்றன. ஒவ்வொரு விஷயமும் ஒன்றையொன்று விறுவிறுவென்று தொடர்ந்து செல்கின்றன....”

அவளது இயல்பான துணிச்சல் உணர்ச்சி மீண்டும் அவள் நெஞ்சில் எழுந்தது. அந்த உணர்ச்சியால் அவளது மனத்தில் பற்பல சிந்தனைகளும் உருவத் தோற்றங்களும் தோன்றி நிரம்பின. அவள் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டு தனது சிந்தனைகளைச் சொல்லில் வார்த்துச் சொல்லத்தொடங்கினாள்.

“இந்த வாழ்க்கை அதன் பாட்டுக்குப்போய்க்கொண்டே இருக்கிறது. ஒரே முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.... சமயங்களில் இது மிகவும் சிரமமாய்த்தானிருக்கிறது. ஜனங்கள் துன்புறுகிறார்கள்; அவர்களை அடிக்கிறார்கள், குரூரமாக வதைக்கிறார்கள்; அவர்களுக்கு எந்த இன்பமும் கிட்டாமல் போக்கடிக்கிறார்கள். இதைக் கண்டால் மிகுந்த சிரமமாயிருக்கிறது.”

லுத்மீலா தன் தலையைப் பின்னால் சாய்த்துத் தாயை அன்பு ததும்பப் பார்த்துக்கொண்டே சொன்னாள்.