பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

மக்சீம் கார்க்கி


"ஒரு ஆசிரியை! என்று சுருக்கமாகக் கூறிவிட்டு மேலும் கீழும் நடந்தான் பாவெல்.

“அவள் மிகவும் ஏழையாகத்தான் இருக்க வேண்டும். மோசமாகத்தான் உடை உடுத்தியிருந்தாள். அவளுக்கு லகுவில் சளிப்பிடித்துவிடும். அவளது பெற்றோர்கள் எங்கே?”

“மாஸ்கோவில்!” என்று பதில் கூறிவிட்டு, அவன் தன் தாயருகே வந்து நின்று மென்மையாக, உறுதி தோய்ந்த குரலில் சொன்னான்: “அவளது தந்தை ஒரு பணக்காரர். அவர் இரும்பு வியாபாரி. அவருக்குச் சொந்தத்தில் நிறையக் கட்டிடங்கள் உண்டு. ஆனால் அவள் தன் வாழ்க்கையில் இந்த வழியைத் தேர்ந்தெடுத்ததால், அவளை வெளியேற்றிவிட்டார் அவர். அவள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவள்; விரும்பியதெல்லாம் கிட்டக்கூடிய வாழ்க்கைதான் வாழ்ந்தாள்; ஆனால் இன்றோ அவள் இந்த இரவில், ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்கிறாள்...”

இந்தச் செய்தியைக் கேட்டு தாய் திக்பிரமையடைந்தாள்: அறையின் மத்தியில் நின்றுகொண்டு புருவத்தை உயர்த்தித் தன் மகனைப் பார்த்தாள், பிறகு அமைதியாகக் கேட்டாள்.

“அவள் நகருக்கா போகிறாள்?”

“ஆமாம்.”

“ச்சூ! ச்சூ! பயமில்லையா அவளுக்கு?”

“ஊஹும். அதெல்லாம் பயப்பட மாட்டாள்” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.

“ஆனால்... ஏன் போகணும்? இன்றிரவு இங்கு தங்கியிருக்கலாமே. என்னோடு படுத்துக்கொண்டிருக்கலாமே!”

“அது சரியல்ல. காலையில் அவளை இங்கு யாரும் பார்த்துவிடக் கூடாது. அதனால் சிக்கல் வரும்.”

அவனது தாய் ஜன்னலுக்கு வெளியே ஒரு சிந்தனையுடன் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

“இதிலெல்லாம் என்ன ஆபத்து இருக்கிறது. என்ன சட்ட விரோதம் இருக்கிறது என்பது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை, பாவெல்! நீங்கள் தப்பாக ஒன்றும் செய்யவில்லை, இல்லை.... செய்கிறீர்களா?” என்று அமைதி நிறைந்த குரலில் கேட்டாள்.

அதைப்பற்றி அவ்வளவு தீர்மானமாக அவளால் சொல்லமுடியவில்லை; எனவே தன் மகனின் தீர்ப்பை எதிர்பார்த்தாள்.