பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

மக்சீம் கார்க்கி


செய்யும்போதெல்லாம் ஏதோ ஒரு சோக மயமான, இனிய கீதத்தைச் சீட்டியடித்துக்கொண்டிருந்தான்,

“ஹஹோல் இங்கேயே வழக்கமாய்ச் சாப்பிடட்டுமே!” என்று ஒரு நாள் தன் மகனிடம் சொன்னாள் தாய்; “அது உங்கள் இரண்டு பேருக்குமே நல்லது. நீங்கள் இருவரும் ஒருவரைத் தேடி ஒருவர் ஓடிக்கொண்டிருக்க வேண்டாம் அல்லவா?”

“உங்களுக்கு அனாவசியத் தொல்லை எதற்காக?” என்று தோளைக் குலுக்கிக்கொண்டே சொன்னான் பாவெல்.

“அபத்தம்” ஏதோ ஒரு வகையில் ஆயுள் பூராவும் தொல்லையாய்த்தானே இருக்கிறது. அவனைப் போன்ற நல்ல மனிதனுக்காக தொல்லைப்படலாம்!” என்றாள் தாய்.

“சரி, உன் இஷ்டம். அவன் இங்கு வந்தால் எனக்குச் சந்தோஷம்தான்!” என்றான் மகன்.

ஹஹோல் வந்து சேர்ந்தான்.


8

தொழிலாளர் குடியிருப்பின் கோடியிலிருந்த அந்தச் சின்னஞ்சிறிய வீடு, ஊர் ஜனங்களின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் சுவர்களை எத்தனையோ சந்தேகக் கண்கள் ஏற்கெனவே கூர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தன. அந்த வீட்டைப்பற்றி எண்ணற்ற வதந்திகள் இறக்கை முளைத்து அதிவேகமாகப் பறந்து பரவின. வீட்டின் சுவர்களுக்குள்ளே ஏதோ ஒரு பரம ரகசியம் பதுங்கிக் கிடப்பதாகவும், அதை விரட்டியடிக்க வேண்டும் எனவும் ஜனங்கள் எண்ணிக் கொண்டார்கள். இராத்திரி வேளைகளில் அவர்கள் ஜன்னலின் வழியே தலையை நீட்டி எட்டிப் பார்த்தார்கள்; சமயங்களில் ஜன்னல் கண்ணாடியைக் கையால் தட்டி விட்டு, உடனே பயத்தால் விழுந்தடித்துக்கொண்டு ஓடிச் சென்றார்கள்.

ஒரு நாள் பெலகேயாவை பெகுன்சோவ் என்ற சாராயக் கடைக்காரன் வழியில் சந்தித்தான். அவன் ஒரு அழகான கிழவன். ஊதா நிறமான தடித்த அரைக் கோட்டும், தொள தொளத்துச் சிவந்த கழுத்துச் சதையைச் சுற்றிக் கரிய நிறப் பட்டுக் கச்சையும் அணிந்திருப்பான்; பளபளக்கும் கூரிய மூக்கின் மீது ஆமை ஓட்டால் ஆன ஒரு மூக்குக் கண்ணாடி தரித்திருப்பான். எனவே அவனுக்கு ஊரார் ‘எலும்புக் கண்ணன்’ என்று பட்டப் பெயர் வைத்திருந்தார்கள்.