பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மக்சீம் கார்க்கி


ஹஹோல் ரொம்ப அருமையான ஆசாமி. தொழிற்சாலையிலே அவன் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொள்வேன்— இந்த ஆசாமியை எதுவும் அசைக்க முடியாது. சாவு ஒன்றுதான் இவனைச் சரிக்கட்டும். உருக்கினாலான பிறவி இவன்! பாவெல், நான் சொல்வது உண்மைதானே?”

“ஆமாம்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல்.

“நல்லது! என்னைப் பார். எனக்கு நாற்பது வயதாகிறது. உன்னை விட இரட்டை வயது, உன்னை விட இருபது மடங்கு அனுபவம் எனக்கு உண்டு. மூன்று வருஷத்திற்கு மேல் நான் பட்டாளத்தில் வேலை பார்த்தேன். இரண்டு தடவை கல்யாணம் பண்ணினேன்: முதல் தாரம் செத்துப்போனாள். இரண்டாவது பெண்டாட்டியை நானே விரட்டியடித்துவிட்டேன். காகஸஸிலும் இருந்திருக்கிறேன். துகபர்த்சி[1]களையும் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு வாழ்க்கையைச் சமாளிக்கத் தெரியாது. தெரியவே தெரியாது, தம்பி”

அவனது நேரடியான பேச்சை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். இத்தனை வயதான ஒரு மனிதன் வந்து தனது மகனிடம் அவனது உள்ளத்தில் கிடந்ததையெல்லாம் திறந்து கொட்டிப் பேசுவதைக் காண்பது அவளுக்கு இன்பம் அளித்தது. ஆனால், பாவெல் நடந்துகொள்ளும் முறையோ சுமூகமாகமாற்றியிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. எனவே தானாவது அவனுக்கு அன்பு காட்டி, அந்த வயோதிகனின் பேச்சுக்கு ஈடுகட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

“மிகயீல் இவானவிச்! ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டாள்.

“கேட்டதே போதும், அம்மா, நான் சாப்பிட்டாயிற்று. பாவெல், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கவில்லை என்பதுதானே உன் எண்ணம்?”

பாவெல் இடத்தைவிட்டு எழுந்து, கைகளை முதுகுப்புறமாகக் கட்டிக்கொண்டு மேலும் கீழும் நடந்தான்.

வாழ்க்கை சரியான பாதையில்தான் போகிறது” என்று பேச

ஆரம்பித்தான் பாவெல்; உங்களைக்கூடத் திறந்த மனத்தோடு இங்கு


  1. துகபர்த்சி–ஒரு சமயக் கட்சியினர்–மெ-ர்.