பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

77


கொண்டு வந்து சேர்க்கவில்லையா? வாழ் நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் நம்போன்றவர்களை அது கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்க்கிறது; நம் அனைவரையும். ஒவ்வொருவரையும் ஒன்று சேர்க்கும் காலமும் வந்தே தீரும். வாழ்க்கை என்பது நமக்கு இன்று ஒரு பெரும் பாரமாகவும் அதீதமாகவும் இருக்கிறது, ஆனால் அதே வாழ்க்கைதான் தனது கசப்பான உண்மையை நமது கண்ணுக்கு முன்னால் காட்டுகிறது: வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் எப்படி விரைவில் தீர்ப்பது என்பதற்கும் அதுவே வழிகாட்டுகிறது.”

“அப்படிச் சொல்லு, அதுதான் உண்மை ” என்றான் ரீபின். “மக்கள் அனைவரையும் பரிபூரணமாகச் சீர்படுத்தியே ஆகவேண்டும். ஒரு மனிதன் அசுத்தமாயிருந்தால், அவனைக் கொண்டுபோய்க் குளிப்பாட்டி, துடைத்துத் துவட்டி, அவனுக்குச் சுத்தமான ஆடைகளை அணிவித்தால் சரியாகிவிடுவான். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பான். இல்லையா? ஆனால், அவன் உள்ளத்தைச் சுத்தப்படுத்துவது எப்படி அதுதான் சங்கதி!”

பாவெல் தொழிற்சாலையைப் பற்றியும், தொழிற்சாலை முதலாளிகளைப் பற்றியும், உலகின் பிற பாகங்களிலுள்ள தொழிலாளர்கள் எப்படித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்பது பற்றியும் உணர்ச்சிமயமாகப் பேசினான். சில சமயங்களில் பாவெலின் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைப்பது மாதிரி ரீபின் மேஜை மீது குத்துவான். இடையிடையே அவன் சொன்னான்.

“ஆமாம். அதுதான் சங்கதி!”

ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னான்:

“நீ இன்னும் சின்னப்பிள்ளை. மனிதர்களைச் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை.”

“சின்னவன் பெரியவன் என்று பேசவேண்டாம்” என்று ரீபினின் முன்னால் வந்து நின்றுகொண்டு கடுமையாகச் சொன்னான் பாவெல்: “யார் சொல்வது சரி என்பதைப் பார்ப்போம்!”

“அப்படியென்றால்—நீ சொல்கிறபடி பார்த்தால் நம்மை ஏமாற்றுவதற்காகத்தான் கடவுளைக்கூட உண்டாக்கியிருக்கிறார்கள் என்றாகிறது. இல்லையா? ஹும். எனக்கும் அப்படித்தான்படுகிறது. நமது மதம்-ஒரு போலி, பொய்.”

இந்தச் சமயத்தில் தாய் வந்து சேர்ந்தாள். அவளுக்கோ கடவுள் நம்பிக்கை அதிகம். அந்த நம்பிக்கை அவளைப் பொறுத்தவரையில்