பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மக்சீம் கார்க்கி


புனிதமானது; உயிருக்குயிரானது. எனவே தனது மகன் கடவுளைப் பற்றியோ கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ ஏதாவது பேச ஆரம்பித்தால், அவள் தன் மகனைக் கூர்ந்து பார்ப்பாள், கூரிய நாத்திக வார்த்தைகளால் தன் இதயத்தைக் கீற வேண்டாம் என்று தன் மகனிடம் மெளனமாய்க் கெஞ்சுவதுபோல இருக்கும் அந்தப் பார்வை. எனினும் அவனது நாத்திகத்திற்குப் பின்னால் நம்பிக்கை ஒன்றிருப்பதாக அவளுக்குப்படும்: அந்த எண்ணமே அவளை ஓரளவு சாந்தப்படுத்தும்.

“அவன் எண்ணங்கள் எனக்கு எப்படிப் புரியும்?” என்று தனக்குள் நினைத்துக்கொள்வாள் தாய்.

பாவெலின் பேச்சு, வயதான ரீபினின் மனதைக்கூடப் புண்படுத்தி இருக்கும் என்று அவள் கருதினாள். ஆனால், ரீபினே அமைதியுடன் பாவெலை நோக்கி அதுபற்றிக் கேட்டதைக் கண்டு அவளால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“கடவுளைப் பற்றிப் பேசும்போது மட்டும், கொஞ்சம் ஆற அமரப் பேசு, அப்பா!” அவள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு விட்டு அதிகமான உத்வேகத்தோடு பேசினாள்: “நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்! ஆனால் நானோ கிழவி. எனக்கோ, என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு மட்டும் போய்விட்டால், என் துயரத்தைச் சொல்லியழக்கூட ஒரு துணையிராது!”

அவளது கண்களில் கண்ணீர் நிரம்பி நின்றது; தட்டுக்களைக் கழுவும்போது அவளது கைவிரல்கள் நடுங்கின.

“நீங்கள் எங்களைப் புரிந்துகொள்ளவேயில்லை, அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

“எங்களை மன்னித்துக்கொள், அம்மா” என்று மெதுவாக ஆழ்ந்த குரலில் சொன்னான் ரீபின்; லேசாகச் சிரித்துக்கொண்டே பாவெலைப் பார்த்தான்.

“இத்தனை வருஷமாய் ஊறிப்போன உன் நம்பிக்கையைப் பிடுங்கியெறிய முடியாது என்பதை நான் மறந்துவிட்டேன்.”

“நீ நம்புகிற இரக்கமும் அன்பும் நிறைந்த கடவுளைப்பற்றி நான் பேசவில்லை” என்று தொடர்ந்தான் பாவெல்; “ஆனால் நமது குருக்கள் குண்டாந்தடி மாதிரி காட்டி நம்மைப் பயமுறுத்துகிறார்களே அந்தக் கடவுளை, ஒரு சிலரின் கொடுமைக்கு மக்களெல்லாம் பணிந்து கொடுக்க வேண்டும் என்று எந்தக் கடவுளின் பேரால் நம்மை நிர்ப்பந்தப்படுத்துகிறார்களோ அந்தக் கடவுளைப் பற்றித்தான். அம்மா, நான் பேசுகிறேன்.”