உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாழ்வு மனப்பான்மை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாழ்வுணர்ச்சி - உயர்வுந்தல்

11

தான் ஏதாவது ஒரு வகையில் மற்றவர்களைக் காட்டிலும் உயர்வுடையவனாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும் என்ற ஆவலே மனிதனுடைய வாழ்க்கையில் முக்கிய ஸ்தானம் வகிக்கிறது; பாலுணர்ச்சியும் இதற்குக் கீழடங்கியதுதான் என்பது ஆட்லர் கருத்து. மனிதனுடைய நடத்தையும் அவனுடைய மனோபாவங்களும் தனது உயர்வை மற்றவர் முன்னிலையில் நிலைநாட்டவேண்டும் என்ற அடிப்படையையே கொண்டிருக்கின்றன. இதைத் தான் ஆட்லர் உயர்வுந்தல் என்று குறித்தார். மற்றவர்களைவிடத் தான் ஒரு வகையில் உயர்ந்தவன் என்று நிலை நாட்டவேண்டுமென்று உள்ளத்திலே எழுகின்ற வேகம் என்று இதைச் சொல்லலாம்.


பிராய்டும் ஆட்லரும் மன நோய்களைத் தீர்க்கும் முயற்சியில் முதலில் ஈடுபட்டார்கள். அந்த முயற்சியில் ஏற்பட்ட அனுபவங்களையும் ஆராய்ச்சிகளையும் கொண்டு பாலுணர்ச்சியே வாழ்க்கையின் போக்கை அமைக்கிறது என்ற முடிவுக்கு பிராய்டு வந்தார். நான் முன்பே குறிப்பிட்டுள்ளபடி பாலுணர்ச்சியின் முக்கியத்தை ஆட்லர் மறுக்கவில்லையாயினும், வாழ்க்கையின் போக்கை அமைப்பதில் உயர்வுந்தலே முதல் ஸ்தானம் வகிக்கிறது என்ற முடிவுக்கு இவர் வந்தார். இவ்வாறு முடிவுகள் வேறுபடவே இருவரும் பிரிந்து தனித் தனியாகத் தமது கொள்கைகளின்படி மனநோயைத் தீர்ப்பதில் முனைந்தார்கள். தமது ஆராய்ச்சி முடிவுகளைப் பற்றிச் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்; பல நூல்களும் எழுதினார்கள். தாழ்வு உணர்ச்சி, உயர்வுந்தல் முதலிய கருத்துக்களுக்கு முக்கிய ஸ்தானம் கொடுத்து அவற்றை விரிவாக ஆராய்ந்தவர் ஆட்லரே யாவார்.