பக்கம்:திரவிடத்தாய்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்தொன்பதின்ம ரென்ப.....அவர்....தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப".

".....இடைச்சங்க மிருந்தார்....மூவாயிரத்தெழு நூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவரைச் சங்கமிரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாற னீறாக ஐம்பத்தொன்பதின் மரென்ப.... அவர் தமிழாராய்ந்தது கபாடபுரத் தென்ப. அக்காலத்துப் போலும் பாண்டியனாட்டைக் கடல் கொண்டது."

"கடைச்சங்கமிருந்தது.....தமிழாராய்ந்து ஆயிரத் தெண்ணூற் றைம் பதிற்றியாண்டு என்ப....சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப் பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப... தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப" என்று கூறப்பட்டு உள்ளது.

தமிழ்நூல்களைக் கல்லாமலே பன்னூறாயிரம் ஆண்டுகட்கு முன்னே குமரிமுனைக்குத் தெற்கே, இந்தியா தென்கண்டம் (ஆஸ்திரேலியா) ஆப்பிரிக்கா என்ற மூன்று கண்டங்களையும் இணைத்துக்கொண்டு ஒரு பெருநிலப் பரப்பிருந்ததென்றும்,அங்கேதான் மாந்தன் தோன்றினானென்றும், ஊரும் உயிரிகள் கூட அங்கேதான் தோன்றினவென்றும், அது பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற பின் பல கடல்கோள்களால் தென் பெருங்கடலில் மூழ்கி விட்டதென்றும் ஹெக்கேல், ஸ்காட் எலியட் முதலிய மேலையாராய்ச்சியாளர் கூறி, அதற்கு லெமூரியா, காண்டுவானா (Gondwana) என்ற பெயர்களையும் இட்டிருக்கின்றனர்.


"வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரித லின்று" (குறள். 955)


என்னுங் குறளுரையில், பழங்குடிக்கு எடுத்துக்காட்டாக, "சேர சோழ பாண்டியர் குடிபோலும் படைப்புக் காலந்தொட்டு மேம் பட்டு வருங் குடி" எனக் குறிப்பிட்டுள்ளார் பரிமேலழகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/14&oldid=1430594" இலிருந்து மீள்விக்கப்பட்டது