பக்கம்:திரவிடத்தாய்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பதினெட்டாகக் கணக்கிடப்பட்டன. அப் பதினெட்டும் பிற்காலத்தில் ஐம்பத்தாறாய்ப் பிரிந்து போனமை புராணங் கூறும். பத்தாம் நூற்றாண்டில் இருந்த அல்லது அதையடுத்து இருந்த இலக்கணவுரையாசிரியர், அக்கால நிலைக் கேற்ப அற்றைத் தமிழ்நாட்டின் நடுவொழிந்த பெரும்பாகத்தைத் தொகைபற்றிய பழைய மரபை விடாமல் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளாகப் பிரித்தனர். அவற்றுள் சேர நாட்டுப் பகுதிகளான குட்டம் குடம் வேண் மலாடு என்பன உள்ளன, அக்காலத்து மலையாளமொழி தோன்றாமையின். நன்னூலார் தங்காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் தொல்காப்பியர் காலப் பன்னிரு கொடுந்தமிழ் நாடுகளையும் மனத்துட்கொண்டு,


"செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி"


என நூற்பாச் செய்தார். பதினெண் நிலங்களை,

"சிங்களம் சோனகம் சாவகம் சீனம் துளுக்குடகம் கொங்கணம் கன்னடம் கொல்லம் தெலுங்கம் கலிங்க கங்கம் மகதம் கடாரம் கவுடம் கடுங்குசலம் வங்கம் தங்கும் புகழ்த்தமிழ் சூழ்ப னேழ்புதிவி தாமிவையே"


என்றும் செய்யுள் கூறும். இதிற் கூறிய சாவகம் சீனம் கடாரம் என்பவை முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளைச் சேர்ந்தவையல்ல. தமிழொழிந்த பதினேழ் நிலங்களிற் பல முற்காலக் கொடுந்தமிழ் நாடுகளா யிருந்தமையின் கொடுந்தமிழ் நாடல்லாத பிறவற்றையுஞ் சேர்த்துக் கூறிவிட்டார் பவணந்தியார்.

செந்தமிழ் தொல்காப்பியர் காலத்தில் வேங்கடம் வரை வழங்கியதாலும், அதையடுத்து வடக்குள்ள கன்னடமுந் தெலுங்கும் முற்காலத்தில் கொடுந்தமிழா யிருந்தமையாலும், அவற்றுக்கப்பால் தற்போது ஆரிய வடிவாயுள்ள மகாராட்டிரம் (மராட்டி) கூர்ச்சரம் (குசராத்தி) என்பவற்றையும் தமிழ் தெலுங்கு கன்னடத்தோடு சேர்த்துப் பஞ்ச

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/23&oldid=1430603" இலிருந்து மீள்விக்கப்பட்டது