பக்கம்:திரவிடத்தாய்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திராவிடம் என வடநூலார் பண்டைக்காலத்தில் வழங்கியமையாலும், வடநாட்டாரிய மொழிகளில் திரவிடக் கூறான சொற்களும் நெறிமுறைகளும் கலந்துள்ளமையாலும், முதலை கூட்டம் முதலிய தமிழ்ச் சொற்கள் நேபாள நாட்டு மலைவாணர் மொழியிலும் வழங்குவதாகத் தெரிகின்றமையாலும், இந்தியாவின் வடமேற்கில் பெலுச்சித்தானத்திலுள்ள மலைவாணர் பிராகுயி என்னும் திரவிடமொழியைப் பேசுகின் றமையாலும், ஒரு காலத்தில் நாவலந்தேய முழுவதும் தமிழல்லா விடினும் திரவிடமாவது வழங்கியிருத்தல் வேண்டும் என்பது ஊகிக்கப்படும்.

இன்றும் தென்னாட்டில் ஓரளவு செவ்வையாய்ப் பேசப்படும் தமிழ் வடக்கு நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து முதலாவது கொடுந்தமிழாயும் பின்பு திரவிடமாயும் திரிவதையும், திரவிடமும் ஆரியக்கலப்பால் காலாரியமாய் மாறுவதையும், அதற்கப்பால் முறையே அரையாரிய மொழிகளும் முழு ஆரிய மொழிகளும் வழங்குவதையும், ஆரியர் பழங்குடிச் சொற்களை யெல்லாம் அகற்றிவிட்டு அவற்றிடத்தில் ஆரியச் சொற்களையே வழங்குவதில் கண்ணுங் கருத்துமாயிருந்து இக் கேட்டுத்தொழிலை வடக்கிருந்து தென்கோடிவரை செய்து வருவதையும் நோக்கின், முதற் காலத்தில் ஒரு மொழியே நாவலந்தேய முழுதும்தென்கோடியிலிருந்து வடகோடி நோக்கிச் சிறிது சிறிதாய்த் திரிந்து வழங்கிய தென்பதையும், ஆரியக் கலப்பில்லாவிட்டால் இன்றும் வடநாட்டில் திரவிடமே வழங்கும் என்பதையும் உய்த்துணரலாம்.

ஒரு மொழியே சிறிது சிறிதாய்ப் பெயர்ந்து வழங்கியமை யாலேயே, வடநாடுகளை வேற்றுமொழி நாடென்னாது மொழி பெயர் தேயம்' என்றனர் முன்னோர்.


"மொழிபெயர் தேஎத்த ராயினும்" .(குறுந். 11)


தமிழினின்று முதலாவது பிரிந்துபோன கொடுந் தமிழ்மொழிகள் கூர்ச்சரமும் மகாராட்டிரமுமாமும். அதன் பின் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் முறையே பிரிந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/24&oldid=1430604" இலிருந்து மீள்விக்கப்பட்டது