பக்கம்:திரவிடத்தாய்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தமிழ் அல்லது தமிழம் என்னும் பெயர் போன்றே, திரவிடம் என்பதும், முதலாவது செந்தமிழ் கொடுந்தமிழ் ஆகிய இருவகைத் தமிழையும் ஒரே மொழியாகக்கொண்ட அவற்றை ஒருங்கே உணர்த்தி வந்தது. தெலுங்கு தனியாய்ப் பிரிந்துபோனபின்பு, திரவிட மொழிகளை 'ஆந்திர திரவிட பாஷை' என்னும் இணைமொழிப் பெயரால் அழைத்தனர் வடநூலார். இப்பெயரில் திரவிடம் என்னும் வருமொழி தெலுங்கொழிந்த திரவிடத்தை யெல்லாம் ஒரு மொழியாகக் கொண்டது. இப் பெயரை 7ஆம் நூற்றாண்டில் குமரிலபட்டர் வழங்கினார். பின்பு கன்னடமும் மலையாளமும் பிரிந்து போனபின், தமிழ் என்னும் பெயர் பொருள் சுருங்கிச் சோழ பாண்டிய நாட்டுத் தமிழ்ப் பகுதியை மட்டும் குறிக்கும் சிறப்புப் பெயராயும், திரவிடம் என்பது ஒரோவிடத்துத் தமிழையும் ஒரோவிடத்துத் திரவிட மொழிகள் எல்லாவற்றையுங் குறிக்கும் பெயராயும் வழங்கி வந்தன. சென்ற நூற்றாண்டில்தான் கால்டுவெல் கண்காணியார் திரவிடம் என்னும் சொல்லைத் திரவிடமொழிகளின் பொதுப்பெயராகவும் தொகுதிப் பெயராகவும் வரையறுத்தனர்.

சேரநாட்டுத் தமிழ் கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை செந்தமிழாயும், பின்பு 16ஆம் நூற்றாண்டுவரை கொடுந் தமிழாயுமிருந்து, அதன் பின் ஆரியக்கலப்பால் மலையாளம் என்னும் திரவிடமொழியாய்த் திரிந்தது. இதைக் கடைக்கழக நூல்களாலும், சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பா மாலை, சேரமான்பெருமாள் செய்யுள், நம்பியாரூரர் தேவாரம், குலசேகராழ்வார் பெருமாள் திருமொழி என்னும் சேரநாட்டுச் செந்தமிழ் நூல்களாலும், அந் நாட்டுக் கல்வெட்டுகளாலும், செப்புப்பட்டயங்களாலும், மலையாள நூல்களாலும் அறியலாம்.


"வடவேங்கடந் தென்குமரி ஆயிடைத் - தமிழ் கூறு நல்லுலகத்து"


என்று பனம்பாரனாரும்.


"வடக்குந் தெற்குங் குடக்குங் குணக்கும் வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/25&oldid=1430605" இலிருந்து மீள்விக்கப்பட்டது