பக்கம்:திரவிடத்தாய்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முகவுரை உலக மொழிகளுள் தலைமையானவற்றுள் தமிழும் ஒன்றெனினும், பல்குழுவும் பாழ்செயும் உட்பகையும் தமிழகத்திலிருந்துகொண்டு, தமிழின் பெருமையைப் பிறநாடுகள் மட்டுமன்றித் தமிழ்நாடும் அறியாதபடி, அதனை மறைத்து வருவது மிக மிக இரங்கத்தக்கதொன்றாம். ஆராய்ச்சியாளரோ வெனின், ஓரிருவர் நீங்கலாகப் பிறரெல்லாம், பிறநாட்டுச் செய்திகளாயின் மறைந்த வுண்மையை வெளிப்படுத்துவதும், தமிழ்நாட்டுச் செய்திகளாயின் வெளிப்பட்ட வுண்மையை மறைத்து வைப்பதுமே தொழிலாகக் கொண்டுள்ளனர். ஆயினும், கார் காலத்தில் மறைக்கப்பட்ட கதிரவன் திடுமென ஒருநாள் திகழ்ந்து தோன்றுவதுபோல், தமிழும் ஒருநாள் உலகத்திற்கு வெளிப்படும் என்பதற்கு எட்டுணையும் ஐயமின்று.

தமிழே திரவிடத்தாய் என்பது மிகத் தெளிவாயிருப்பினும், 1891ஆம் ஆண்டிலேயே,

"கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும்"

என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் திட்டமாய்க் கூறியிருப்பவும், ஆராய்ச்சியின்மையாலோ, கவலையின்மையாலோ, துணிவின்மையாலோ, தமிழ்ப்புலவர் எடுத்துக் காட்டாததினால், தமிழின் திரவிடத்தாய்மை பொதுமக்களால் அறியப்படாதிருப்பதுடன், தமிழ் ஒரு புன்சிறு புது மொழியினும் தாழ்வாகக் கருதப்படு கின்றது.

பெலுச்சித்தானத்திலும் வடஇந்தியாவிலும் இன்னும் திரவிட மொழிகள் வழங்குவதையும், வடநாட்டு ஆரிய மொழிகளிலும் திராவிட நெறிமுறைகளே அடிப்படையாய் அமைந்து கிடப்பதையும், குச்சரமும் (குசராத்தி), மராட்டியும் பண்டைக் காலத்தில் பஞ்சத் திராவிடிகளில் இரண்டாக வடமொழியாளராலேயே கொள்ளப்பட்டதையும், இந்தியமொழிகளிலெல்லாம் மூவிடப்பெயர்களும் முக்கியமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/3&oldid=1430452" இலிருந்து மீள்விக்கப்பட்டது