பக்கம்:திரவிடத்தாய்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சொல்லையும்1, அறியும்போதே, அச் சொற்கட்குத் தமிழிற் கூறும் பொருள் நன்றாய் விளங்குகின்றது; வழுவுந் தெரிகின்றது.

	10. தமிழ்ப் பண்படுத்தம்

சிலர், வடநாட்டில் பிராகிருதம் என்னும் பழைய மொழிகளைப் பண்படுத்திச் சமற்கிருதம் அமைத்தாற் போலத் தென்னாட்டிலும் திரவிடமொழிகளைப் பண்படுத்தி அமைத்ததே செந்தமிழ் என்றும், தமிழுக்குப் பிற திரவிட மொழிகள் கிளைமொழி யெனப்படும் சேய்மொழிக ளாகாது இனமொழி யெனப்படும் உடன்பிறப்பு மொழிகளே யென்றும், திரவிடச் சொற்களின் வேர்களையெல்லாம் செந்தமிழல்லாத திரவிட மொழிகளில்தான் காணவேண்டும் என்றும் கூறுகின்றனர். இவர் திரவிட சரித்திரத்தையும் மொழி நூலையும் தமிழின் இயல்பையும் அறிந்திருந்தால் இங்ஙனங் கூறார்.

தமிழ் பண்படுத்தப்பட்டது உண்மையே. ஆனால், அப்பண்படுத்தம் ஆரியமுறையில் வேர்ச்சொல் மறையும்படி திரித்துச் செய்யப்பட்டதன்று. முதற்றமிழரின் ஒலிமுறையும், சொற்களின் பழைய அல்லது திருத்த வடிவம், நுண்பொருள் விளக்கமும், சொற்றொடரின் வழாநிலையும் காத்துக்கொள்ளும் வரம்பீடே செந்தமிழப் பண்படுத்தமாம்.

டண முதலிய (மொழிமுதலாகா) வெழுத்துகளைக் கொண்டு முதற்றமிழரின் சொற்கள் தொடங்கவில்லை. அதனால், தமிழுக்கு முதன்முதல் இலக்கணம் வகுத்தபோது, அக்காலை மொழிமுதலாகா வெழுத்துகள் மொழிமுதலெழுத்துகளாகக் கொள்ளப்பட்டில.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரவிடத்தாய்.pdf/32&oldid=1430612" இலிருந்து மீள்விக்கப்பட்டது