அறிஞர் அண்ணா
குடுகுடுப்பாண்டிக்கு இருக்கும் பொறுமைகூட அரசியலில் வேண்டாமா? நாம் என்ன 8 அடி உயரம் 34 அங்குல மார்பு படைத்த பகவத்சிங் பரம்பரையா? நாம் பாடவேண்டிய பாட்டைப் பாடிவிட்டோமா? கொடுக்க வேண்டிய விலையைக் கொடுத்துவிட்டோமா? நீட்டவேண்டிய தியாகப் பட்டியலை நீட்டிவிட்டோமா? இன்னும் நீள வேண்டிய தியாகப் பட்டியல் எவ்வளவோ இருக்கிறது!
(அறிஞர் அண்ணா அவர்கள் 4.6.1961 அன்று சென்னை கொத்தவால் சாவடியில் ஆற்றிய உரை இது)
❖❖❖❖❖
திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன்... ஆனால்...
"நான் திராவிடநாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால், திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதில் ஒளிவு மறைவு இல்லை. அதைச் சொல்லிக் கொள்வதற்கு, வெட்கப்படுவதற்கு ஒன்றும் இல்லை. திராவிட நாடு என்று தனியாக இருந்தால் நாம் தொழில் வளர்ச்சி பெறமுடியும் என்று சொன்னோம். திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணமே, இங்கே தொழில் வளர்ச்சி ஏற்படவேண்டும் என்பதால்தான். அதை நாங்கள் விட்டு விடவில்லை. அடுத்து மொழி பாதுகாக்கப்பட வேண்டும். என்பதற்காக திராவிட நாடு கேட்டோம். மொழி பாதுகாப்புக் கொள்கையை விட்டு விடவில்லை. மாநில சர்க்கார் பல அதிகாரங்களைப் பல துறைகளிலும் பெறவேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டு விடவில்லை.
பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகக் கேட்டோம். அதை நாங்கள் விட்டுவிடவில்லை. ஆகவே, திராவிட நாடு நாங்கள் கேட்டதற்கான காரணங்களில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், அவை நியாயமான காரணங்கள். மனமார்ந்து ஏற்றுக்கொண்ட காரணங்கள். மாமியார் வீட்டை விட்டு விட்டான் என்றால் மனைவியை உடன் அழைத்துச் சென்றுவிட்டான் அல்லது வியாழக்கிழமை வா என்று மனைவிக்குச் சொல்லிக் கிளம்பிவிட்டான் என்பதுதானே தவிர, மனைவியையே விட்டுவிட்டான் என்பது பொருள் அல்ல. இந்த மன்றத்தின் மூலமாகப் பொது மக்களுக்கும், மத்திய சர்க்காருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திராவிட நாட்டை விட்டு விட்டோம் என்றதாலே காரணங்களையும் விட்டுவிட்டோம் என்பது பொருள் அல்ல. அந்தக் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. மத்திய சர்க்காரோடு போராடவில்லை. நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைப் பிரிவுகளிலேயே திருத்தங்கள் வேண்டுமென்பதற்காக வாதாடுகிறேன். அனுபவத்தின் காரணமாக எந்தெந்த வகையில் திருத்தப்பட வேண்டும். எந்தெந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்க நாமனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம்."
19