திராவிட தேசீயம்!
மாறுவது நல்ல மாறுதலாகாது. குழந்தை பெரியவனாக மாறுவது நல்லது; நல்ல மனிதன் கூனனாக மாறுவது நல்லதல்ல!
துச்சமாகக் கருதினாரே
ஜனாப் ஜின்னா முதலில் முஸ்லிம் சமுதாய நலனுக்கான 14 கோரிக்கைகளைத் தந்தார். முஸ்லிம் சமுதாயத்துக்கு சட்டமன்றத்தில் தனி இடம், உருது மொழிக்குப் பாதுகாப்பு முதலிய கோரிக்கைகள் அவற்றில் இருந்தன. 'இதைக் கேட்க நீ யார்?' என்று காங்கிரசுக் கட்சியினர் கேட்டனர்; அதற்கு 'நான் முஸ்லிம்களின் தலைவன்' என்றார் ஜின்னா; அதற்குக் காங்கிரசார், 'ஒகோ, நீயா தலைவன்? அபுல் கலாம் ஆசாத், முஹம்மது அலி, ரபி அகமத் கித்வாய், ஷவுகத் அலி ஆகியவர்களெல்லாம் இருக்கிறார்களே?' என்று கேட்டனர்; 'அவர்களை யெல்லாம் நான் துச்சமாகக் கருதுகிறேன்' என்றார் ஜின்னா.
தேசிய முஸ்லிம்கள் தமது திட்டத்தை ஏற்கவில்லை என்பதால் அவர் — திராவிட நாடு வேண்டாம்: தமிழ் நாடு மட்டும் கொடு என்று இங்கு கேட்பவர்களைப் போல — தனது இலட்சியத்தைச் சுருக்கிக்கொள்ளவில்லை; 'நாட்டுப் பிரிவினையே வேண்டாம் பிரிவினையை ஒப்புக்கொண்டால் போதும்' என்றும் கூறவில்லை. தனது கோரிக்கைகளின் எண்ணிக்கையை 14—லிருந்து 31—ஆக உயர்த்தினார்; அதன் பிறகு, கூட்டு மந்திரிசபை உண்டா?' என்று கேட்டார்! அடுத்து, "நாட்டைப் பிரித்துக் கொடு" என்று கேட்டார்; பிரித்தார்கள்!
அந்தப் பொறுமை நமக்கு வேண்டாமா?
மார்கழி மாதத்தில் குடுகுடுப்பாண்டிகள் நாள்தோறும் அதிகாலையில் வந்து 'நல்லகாலம் பிறக்குது; நல்ல காலம் பிறக்குது' என்று சொல்லிக் கொண்டு செல்வார்கள். ஒவ்வொரு நாளும் அவனுக்கு ஒன்றும் போடவில்லையென்றாலும், 'மாதம் முடிந்த பிறகாவது ஏதேனும் போட மாட்டார்களா' என்று எதிர்பார்த்து, மாதம் முழுவதும் பொறுமையாக வந்து செல்கிறான்; மாதக் கடைசியில் அவனுக்கு ஏதேனும் கிடைக்கும்.
18