திராவிட தேசீயம்!
"பெரிதும் வணிகப் பெருங்குடி மக்கள் நடமாடும் இந்த சென்னை வட்டாரத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்து, அருள்கூர்ந்து தேர்தல் நிதியும் கொடுத்திருக்கிறார்கள். பொதுவாக, கொத்தவால்சாவடிக்கு நாம் வந்தால், காசு கொடுத்து விட்டு அவர்கள் கொடுக்கும் சரக்கை எடைபோட்டு வாங்கிக் கொண்டு செல்வது வாடிக்கை. ஆனால், இன்று நாம் கொடுக்கும் சரக்கை (பேச்சை) அவர்கள் எடை போட்டு வாங்கிக் கொள்ளவேண்டும்.
எப்படி மதிப்போம்?
ஒரு கடையில் நீண்ட நாள் வேலை பார்த்த ஒரு தொழிலாளி, அக்கடையிலிருந்து விலகிச் சென்றபின், 'அந்தக் கடையில் தராசு சரியில்லை; வீசைக் குண்டு 40 பலம் இருக்காது' என்று சொன்னால் என்ன பொருள்? 'ஏனப்பா, நீதானே அந்தக் கடையில் இதுவரை நிறுத்துக் கொடுத்து வந்தாய்? அப்பொழுது உனக்கு இது தெரியாதா? இப்பொழுது வந்து இப்படிச் சொல்லுகிறாயே?' என்றுதான் கேட்போம். அதற்கு அவன், 'அப்பொழுது அப்படி! ஆனால், இப்பொழுது இப்படி' என்பானானால் அவனை நாம் எப்படி மதிப்போம்?
அறம் அதுதான்!
ஒருவர் கொத்தவால்சாவடிக்குச் சாமான் வாங்க வந்தால், சாமான் வாங்கும்போதே, அது நல்ல சரக்குதானா — அளவு சரியாக இருக்கிறதா — என்று ஆராய்ந்து பார்த்து உன்னிப்பாகக் கவனிப்பது தான் வாங்குவோரின் கடமை; சரியாக நிறுத்துக் கொடுப்பதுதான் வியாபாரிக்கும் அறமாகும்.
3