திராவிட தேசீயம்!
அந்திக் கடையுமல்ல, அழுகல் சரக்குமல்ல!
இன்று சிலர் திராவிடநாடு இலட்சியத்தை மறுக்கிறார்கள்; மனமாச்சரியத்தால் 'இந்த இலட்சியம் தேவையில்லை' என்கிறார்கள்.
ஒருவர் இப்படிச் சொல்லி, இந்த இலட்சியத்தை எடுத்துவிடுவதற்கு, இது ஒன்றும் அவசர வியாபாரமுமல்ல; சைனாபஜாரில் 'போனால் வராது; -பொழுது விடிந்தால் கிடைக்காது' என்று விற்பார்களே — அப்படிப்பட்ட அந்திக் கடையுமல்ல. ஒரு வாரம் போனால் அழுகி விடக் கூடிய அழுகல் சரக்குமல்ல நம்மிடமிருப்பது.
எனவே, உங்களுக்குள்ள சந்தேகம் தீரும்வரை கழகத்திற்கு வராதீர்கள்; சந்தேகம் தீர்ந்த பிறகு வந்தால், பின்னர் சந்தேகப்படாதீர்கள்! சந்தேகம் அறவே நீங்கும் வரை உள்ளே வரவேண்டாம்!
அந்தப் பதில் நமக்குத் தேவைதானா?
கடையில் சாமான் வாங்கும்போதே, 'சரியாக நிறுக்கப்படுகிறதா?' என்று பாருங்கள். அப்படியில்லாமல், வாங்கிக் கொண்டு வீட்டுக்குப் போய் அதன் பிறகு திரும்பி வந்து, 'சாமான் அளவு சரியில்லை என்று என் மனைவி சொன்னாள்; அதனால் திரும்பி வந்தேன்' என்று சொன்னால், புத்தியுள்ள கடைக்காரன் என்ன சொல்வான்? 'இனிமேல் அந்த அம்மாளையே சாமான் வாங்க வரச் சொல்லுங்கள்; நீங்கள் வரவேண்டாம்' என்றுதான் சொல்லுவான்!
ஏமாளியல்ல நாம்!
திராவிட நாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு முன் எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு ஆராய்ந்து பாருங்கள். ஒரு கூட்டத்தில் ஒரு விஷயம் புரிந்தது; இன்னொரு விஷயம் புரியவில்லை என்றால், இன்னொரு கூட்டத்தையும் கேளுங்கள்; உங்கள் சந்தேகம் தீரும் வரை நான் காத்துக் கொண்டிருக்கிறேன்.
4