அறிஞர் அண்ணா
எல்லாம் புரிந்துவிட்டதாகக் கழகத்திற்குள் வந்து விட்டு, அதன்பிறகு கொள்கை பிடிக்கவில்லை என்றால், கொத்தவால்சாவடியில் சரக்கை வாங்கி இராயபுரத்திலுள்ள வீட்டுக்குச் சென்று பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்துவிட்டுக் கூட அல்ல — பக்குவமாகச் சமைத்துச் சாப்பிட்டுவிட்டு மிச்சமிருப்பதைப் பொட்டலமாக மடித்துக் கொண்டுவந்து கடையில் கொடுத்து, 'சரக்கு நன்றாக இல்லை' என்றால், எந்தக் கடைக்காரனும் வாங்க மாட்டான். அதைப் போல், இந்தக் கடைக்காரனும் (தி.மு.க.) ஏமாளியல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
எனவே, ஆற அமர ஆராயுங்கள்; இது 1962—க்குப் பிறகு அழிந்துவிடும் என்றல்ல; அதன்பிறகு அறிவுக்கண் அடைப்பட்டு போய்விடாது. நன்றாகக் கழகக் கொள்கைகளை ஆராயுங்கள்; இவ்வளவுக்கும் இடம் கொடுத்துத்தான் இயக்கம் நடத்துகிறோம் நாங்கள்.
கதையும் — கருத்தும்!
ஒரு சிறு கதையை உங்களுக்கு உதாரணமாகக் கூற விரும்புகிறேன். ஒரு வைத்தியர், ஜோதிடர், சங்கீத வித்துவான் ஆகிய மூன்று பேரும் வெளியூருக்குப் போனார்கள். பாழடைந்த சத்திரம் ஒன்றில் அவர்கள் தங்கி, சமைத்துச் சாப்பிடத் திட்டமிட்டார்கள்; வைத்தியர் காய்கறி வாங்கப் போனார்; ஜோதிடர் அரிசி வாங்கப் போனார்; சங்கீத வித்துவான் அடுப்பு மூட்டினார்; வைத்தியர் காய்கறிக் கடைக்குச் சென்று 'என்ன இருக்கிறது?' என்று கடைக்காரனைக் கேட்டார்; கடைக்காரன், 'கத்தரிக்காய் இருக்கிறது' என்றான். 'கத்தரிக்காய் சூடு' என்றார் வைத்தியர். 'அப்படியானால் வெண்டைக்காய் வாங்கிப் போங்கள்' என்றான் கடைக்காரன். 'வெண்டைக்காய் உடம்புக்கு நல்லது என்றாலும், இது குளிர் காலமாகையால் சளி பிடிக்கும்' என்றார் வைத்தியர். இப்படியே ஒவ்வொன்றுக்கும் ஆராய்ச்சி செய்தார். கடைசியில் அவர் வாங்குவதற்குப் பொருத்தமான காய்கறி என்ன என்று பார்த்தால் அந்தக் கடையிலே ஒன்றும் இல்லை. தட்டும் கூடையும் தான் மிஞ்சின.
5