உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திராவிட தேசீயம்!

அரிசி வாங்கப் புறப்பட்ட ஜோதிடர் குறுக்கே கருப்புப் பூனை ஒன்று வந்ததால் 'அபசகுனம்' என்று கருதி அந்த இடத்திலேயே ஒரு மணி நேரம் அமர்ந்து விட்டார். அதன் பிறகு புறப்பட்டார். அப்பொழுதும் சில 'அபசகுனங்கள்' ஏற்பட்டதால் தனது இராசி பலனை ஆராய்ந்தார். 'நமது ராசிக்கு இன்று சரியில்லை; இன்னும் மூன்று மணி நேரம் போக வேண்டும்; இப்பொழுது போனால் அரிசியும் கிடைக்காது; அப்படிக் கிடைத்தாலும் வேகாது; வெந்தாலும் உடம்புக்கு ஆகாது' என்று கருதி அங்கேயே மூன்று மணி நேரம் உட்கார்ந்து விட்டார்.

பாத்திரத்தில் தண்ணீரை வைத்து அடுப்பு மூட்டிய சங்கீத வித்துவான் தண்ணீர் நன்கு கொதித்து 'தளதள' வென்று ஓசை எழுப்பியதும், அந்த ஓசைக்குத் தகுந்தாற் போல் தாளம் போட ஆரம்பித்துவிட்டார். தமது தாளமும் தண்ணீர் கொதிக்கும் 'தளதள' வென்னும் ஓசையும் ஒத்து வராததால், 'இந்தத் தப்புத் தாளம் சபைக்கு எடுக்காது!' எனக்கூறி, சட்டுவத்தை எடுத்து அந்தப் பானைமீது அடித்து உடைத்துவிட்டார் — இப்படி ஒரு கதையுண்டு.

எவ்வாறு கிட்டும் வெற்றி!

இலட்சியப் பாதையில் செல்லும்போது இந்தக் கதையில் சொல்லப்பட்ட மூன்று பேருக்கும் ஏற்பட்டதைப்போல, சந்தேகம் ஏற்படுமானால் இலட்சியத்தில் வெற்றிகிட்டாது.

நம்முடைய இலட்சியத்தைப் பற்றிப் பலபேருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. படித்தவர்களுக்கும் ஏற்பட்டது; படிக்காதவர்களுக்கும் ஏற்பட்டது; காங்கிரஸ்காரர்களுக்கும் ஏற்பட்டது; கம்யூனிஸ்ட்களுக்கும் ஏற்பட்டது. அவர்களுடைய சந்தேகங்களையெல்லாம் தம்பி சம்பத் போக்கினார்; துரதிருஷ்டவசமாக, போக்கிய அவருக்கே அந்தச் சந்தேகம் வந்து விட்டது.

காலரா நோய்க்கு மருந்து கொடுப்பார் டாக்டர்; பலருக்கு அந்த நோய் தீரும்; ஆனால், அவருக்கே அந்த நோய் வருதுண்டு. குஷ்ட நோய்க்கு மருந்து கொடுத்துப் பலருடைய நோயைத் தீர்க்கும் டாக்டருக்கே அந்த

6