பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-7-


அறத்துப்பாலின் அமைதி.


கடவுளைக் கருதுக; மழையைத் தொழுக;
நீத்தாரைப் போற்றுக; அறத்தை ஆற்றுக;
இல்லறம் காணுக நல்லதுணை பேணுக;
இன்பமகவு எய்துக; அன்பு புரிக;
5. விருந்தை ஒம்புக; இனியவை கூறுக;
செய்நன்றி அறிக, நடுவுநிலை யுறுக;
அடக்கம் அமைக; ஒழுக்கம் ஒம்புக;
பிறன்இல் விலகுக; பொறையில் நிலவுக;
அழுக்காறு ஒழிக, வெஃகல் விளிக;
10. புறங்கூறாதே; பயனில பகரேல்;
தீவினை அஞ்சுக; ஒப்புரவொழுகுக;
ஈகை இசைக; புகழைப் பூணுக;
அருளை ஆளுக; புலாலை இகழுக;
தவநிலை தழுவுக; அவநிலை ஒழிக;
15. களவைக் கடிக; வாய்மை மொழிக;
வெகுளி விடுக; இன்னாமை மடிக;
கொல்லாமை கொள்க; நில்லாமை தெளிக;
துறவைத் தொடர்க; மெய்யுணர்வுறுக;
அவாவைத் தீர்க, ஊழை ஒர்க;
20. இவ்வகை யாவும் செவ்விய நெறியே
அறத்தின் பாலாய் அமைந்துள ஆய்ந்து
திறத்தியல் தெளிந்து தேசு மிகுந்து
நாளும் நல்லறம் நாடி ஒழுகித்
தன்னுயிர் போல மன்னுயிர் பேணிப்
25. புண்ணிய நிலையில் பொலிந்து வாழுக!
தண்ணளி நிறைந்த தரும வாழ்வால்
கண்ணியம் சுரந்து கதிநலம் கனிந்து
கண்ணிய பிறவி நலம்பல மருவி
எண்ணிய கலங்கள் எல்லாம் எய்தும்
விண்ணியல் இன்பமும் விழிஎதிர் வருமே.