பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

திருக்குறளில் செயல்திறன்

சான்றோர்களால் பழிக்கத்தகுந்த தீயவழிகளில் பொருளைத் தேடி அப் பசியைப் போக்கும் செயலைச் செய்யக்கூடாது என்றும் குறள் கூறுகிறது.

        ஈன்றாள் பசி காண்பா னாயினும் செய்யற்க
        சான்றோர் பழிக்கும் வினை. (656)

2. உன் உயிரே போவதாய் இருப்பினும் சரி, பிற உயிர்களை கொன்று தின்று உன் உயிரைக் காப்பாற்றும் செயலைச் செய்யாதே. அது மட்டுமல்ல; உன்னை ஒன்று கொல்ல வந்தாலும் அதனைக் கொன்று உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினையாதே. அவ்வாறு கொன்று உயிர் வாழ்ந்தால் அது பழிபாவத்தோடு உயிர் வாழும் செயலாகப் போய்விடும்.

        தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறிது
        இன்னுயிர் நீக்கும் வினை. (327)

3. என்னிடத்தில் ஒன்றுமில்லையே, நான் வறியன் என்று எண்ணி, அது தீருதல் பொருட்டு, பிறர்க்குத் தீவினைசெய்து பொருள்திரட்டி உயிர் வாழக்கூடாது, அவ்வாறு செய்தால் நீ வெகு விரைவில் அதற்குமேலும் வறியவன் ஆகிவிடுவாய்.

        இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
        இலன் ஆகும் மற்றும் பெயர்த்து. (205)

4. ஒரு செயலைச் செய்துவிட்டு, "நான் என்ன காரியம் செய்துவிட்டேன்" என்று பின்னே இரங்கி வருந்தும் செயல்களை ஒருக்காலும் செய்யாதே. தவறிச் செய்துவிட்டால், அதற்காக வருந்து! அழு! மறுபடியும் அத்தகைய செயல்களைச் செய்யாதே. அது நல்லது.

        எற்றென்று இரங்குவ செய்யற்க; செய்வானேல்
        மற்றன்ன செய்யாமை நன்று. (655)