பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

திருக்குறள்



மாட்சிமைப்பட்ட வாழ்க்கையும், மிகுந்த பொருளும் இருந்தும் என்ன பயன்? பயன் சிறிதும் இல்லை.

அவன் தன் வாழ்க்கையில் கவலையற்று வாழ மாட்டான் என்பது பொருள். 897

8.குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.

தவத்தால் மலை போன்ற மதிப்பு மிக்க பெரியாரை ஒருவர் குறைவாக மதிப்பாராயின், உலகில் என்றும் அழியாமல் நிலை பெற்றார் போல் உள்ளவரும் தம் குடும்பத்தோடு அழிந்து போவர்.

குன்றன்னார்-மலை போன்றவர்; குன்ற மதித்தல்-குறைவாக எண்ணுதல்; நிலத்து நின்றன்னார்-உலகில் அழியாமல் நிலைத்து நிற்கத் தக்கவர் 898

9.ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.

தவத்தால் உயர்ந்த கொள்கையை உடையவர் வெகுள்வாராயின் இந்திரனும் இடை நடுவே தன் இந்திர பதவியை இழந்து அழிவான்.

ஏந்திய கொள்கை-உயர்ந்த கொள்கை; சீறுதல்-வெகுளல்; இடைமுரிதல்-இடைக்காலத்திலேயே நிறை கெடுதல்; வேந்தன்-இந்திரன்; வேந்து-இந்திர பதவி. 899

10.இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.

மிகவும் சிறந்த தவத்தினையுடையவர் வெகுள்வாராயின் அளவு கடந்த நல்ல துணையுடையாரும் தப்பிப் பிழைக்க மாட்டார்.

இறந்தமைந்த-அளவு கடந்த; சார்பு-துணை; உய்யார்-பிழைக்க மாட்டார்; சிறந்து அமைந்த சீரார்-மிகவும் சிறந்த தவத்தினை யுடையவர்; செறின்-வெகுளின். 900