பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆராய்ச்சி முன்னுரை

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

திருக்குறள் உலகப் பொது நூல்: தண்டமிழின் மேலாம் தரம் என்று சிறப்பிக்கப் பெறுவது. கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் ஆங்கிலம், லத்தீன் முதலிய மேலை நாட்டு மொழிகளிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், முதலிய இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட தனிச் சிறப்புடையது. திருக்குறளைப் போற்றாத புலவர் இலர்: திருக்குறட் கருத்துக்கள் காணப் பெறாத நூல் இல்லை.

"ஒருவன் செய்தி கொன்றோர்க்குய்தி யில்லென - அறம் பாடிற்றே" - என்ற புறநானூறு 34 ஆம் செய்யுளில் ஆலத்தூர் கிழார் திருக்குறளை "அறம்" என்றே குறித்தார். குறள் வெண்பாவான் ஆக்கப்பட்டமையின் "குறள்” என்றும், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்று மூன்று பால்கள் உடைமையின் "முப்பால்" என்றும் இந்நூல் வழங்கப் பெறும். வெள்ளி வீதியார் “திருவள்ளுவர் மொழிந்த பொய்யா மொழி" என்பர் (திருவள்ளுவமாலை 23); மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் "வள்ளுவர் வாயுறை வாழ்த்து" என்பர் (35) மணி மேகலை ஆசிரியர் ஆகிய சீத்தலைச் சாத்தனார் "பொய்யில் புலவன் பொருளுரை" என்றார் (மணிமேகலை - சிறை - 59 - 64)

"தேவர் குறளும்" என்ற ஒளவையின் பாடல், திருவள்ளுவரைத் "தேவர்" என்று குறிப்பிடும்; திருவள்ளுவமாலை 41 ஆம் செய்யுளும், "தேவர் - திருவள்ளுவர் தாமும் செப்பியவே செய்வார் - பொருவில் ஒழுக்கம் பூண்டார்' என்று திருவள்ளுவரைத் "தேவர்" என்று கூறாநிற்கும். நச்சினார்க்கினியரும் "தேவர்" என்றே குறிப்பிடுவர் (சீவகசிந்தாமணி செ 1881, 1927 உரை.)