பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

505

நம்மைக் கூடாதபடி துறந்து போயினாரை நாம் நம்முள்ளே உடையோமாக, அவரை விட்டுப்பிரியமாட்டாமல் நம் அகக் கவினு[1]மிழப்போம் என்றவாறு.

நம்மைத்துறந்து போயினாரை நாம் மறத்தல் மாட்டேமாதலின், மெய்யழகு அழிந்தது மல்லாமல் நின்ற நிறையும் இழப்போம் என்பதாம்.

ஆக அதிகாரம் ளஉ௫க்குக்குறள் சநஉள௫௰

இப்பால் 126. நிறையழிதல்

என்பது, தலைமகள் மறைக்கத்தக்கவற்றை வேட்கை மிகுதியால் மறைக்க மாட்டாமல் வாய்விடுதல்.

1251. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு

நாணுத்தாழ் வீழ்த்த கதவு

என்பது, நானும் நிறையும் அழியாமல் நீ பொறுக்கவேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது:

நாணமாகிய தாழ்ப்பாளிட்ட நிறை யென்னுங்கதவைக் காம மென்னுங் குந்தாலி பிளந்து போடா நின்றது என்றவாறு.

காம மிகுதியினால் யான் ஆற்ற மாட்டேன் என்றவாறு

1252. காம மெனவொன்றோ கண்ணின்றென் னெஞ்சத்தை

யாமத்து மாளுந் தொழில்

என்பது[2]

எல்லாரும் தொழிலொழிந்து சும்மா இருக்கிற பாதி இராத்திரியிலேயும், என் நெஞ்சத்தை ஒறுத்துத் தொழில் கொள்ளா நின்றபடியினாலே, காமம் என்று சொல்லப்பட்ட ஒன்று தயையில்லாததாய் இருந்தது என்றவாறு.


  1. அகக்கவின் - நிறை நிறை யெனப்படுவது மறைபிற ரறியாமை
  2. இங்குப் பரிமேலழகர் தந்த குறிப்பு இல்லை