பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

506

திருக்குறள்

1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போற் றோன்றி விடும்

என்பது, ஸ்திரீகள் காமம் மறைக்கப்படும் என்றவளுக்குச் சொல்லியது:

இந்தக் காமத்தை யான் என்னுள்ளே மறைக்க நினையா நின்றேன்; அது நில்லாமல் தும்மல் போல வெளிப்பட்டுவிடுகின்றது என்றவாறு.

1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோவென் காமம்

மறையிறந்து மன்று படும்

என்பது இதுவுமது

யான் நிறையுடையேன் என்றிருப்பேன்; அப்படியிருக்கவும் இன்று என்காமம் மறைக்கிறதைக் கடந்து வெளிப்படாநின்றது என்றவாறு.

மன்று படுதல் - பலரு மறிதல்

1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோ

யுற்றா ரறிவதொன் றன்று

என்பது[1]

தம்மை விட்டுப் போனார் பின்னே போகாது, தாமும் விட்டுப் பிரிந்து நிற்கும் நிலைமை, காம நோயினை யுறாதார் அறிவதல்லாமல், காம நோயினை யுற்றவர்கள் அறிவதொன்றன்று என்பதாம். பின்செல்லுகிறதாவது, விடாமல் நினைத்திருக்கிறதாம்.

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி யளித்தரோ

எற்றென்னை யுற்ற துயர்

என்பது

என்னைவிட்டுப் பிரிந்தார் பின்னே நான் போக வேண்டுதலால், என்னை அடைந்த துயர் மிகவும் நன்றென்றவாறு.


  1. இங்கும் அடுத்த குறட்கும் பரிமேலழகர் தந்த துறைக்குறிப்பு இல்லை