பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

507

இக்காமநோய் யான் சொல்லவும் கேட்கவும் ஆவதொன்றன்று; மிகக் கொடிது என்பதாம்.

1257. நாணென வொன்றோ அறியலம் காமத்தாற்

பேணியார் பெட்ப செயின்

என்பது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு பிணங்கியிராமல் மதிமயங்கிப் புணர்ந்த காரணம் என் என்றவளுக்குச்[1] சொல்லியது:

நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பினவற்றைச் செய்யுமளவில், நாணம் என்று ஒன்றையு மறிய மாட்டேமா யிருந்தேம் என்றவாறு.

1258. பன்மாயக் கள்வன் பணிமொழி யன்றோநம்

பெண்மை யுடைக்கும் படை

என்பது இதுவுமது

நம்முடைய நிறையாகிய காவலை அழிக்கிற சேனையாவது, பலபொய் சொல்லவல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? அப்படியான பின்பு அந்தக் காவல் நிற்குமோ? நில்லாது என்றவாறு.

1259. புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சம்

கலத்த லுறுவது கண்டு

என்பது இதுவுமது

அவர் வந்தபோது பிணங்கி இருக்கக் கடவேன் என்று கருதி, முன்நில்லாது அப்பாலே போயினேன்: போன இடத்திலேயும் என் நெஞ்சு நில்லாமல் அவருடனே கூட நினைத்தது ஆனபடியினாலே இனிப்பிணங்கியிருக்கிறது முடியாதென்று புல்லினேன் என்றவாறு.

1260. நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ

புணர்ந்தூடி நிற்பே மெனல்

என்பது இதுவுமது


  1. என்ற தோழிக்கு