பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



520

திருக்குறள்

1296. தனியே யிருந்து நினைத்தக்கா லென்னைத்

தினிய விருந்ததென் னெஞ்சு

என்பது இதுவுமது

என் நெஞ்சு ஈண்டிருந்தது. காதலரைப் பிரிந்திருந்து அவர் கொடுமைகளை யான் தன்னோடு நினைத்தக்கால் அவ்வளவறிந்து என்னைத் தின்பது போலத் துன்பஞ் செய்தற்கே என்றவாறு.

1297. நாணு மறந்தேன் அவர்மறக் கல்லாவென்

மாணா மடநெஞ்சிற் பட்டு

என்பது இதுவுமது.

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க மாட்டாத மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே கூடி என் பிராணனிலும் அதிகமாய் இருக்கிற நாணத்தையும் மறந்துவிட்டேன் என்றவாறு.

1298. எள்ளி னிளிவாமென் றெண்ணி யவர்திற

முள்ளு முயிர்க்காத னெஞ்சு

என்பது இதுவுமது

உயிர்மேலே ஆசையுடைய என்நெஞ்சு நம்மை இகழ்ந்து போனாரென்று அவரை நாமும் இகழ்ந்தோமானால் பிறகு நமக்கு இளிவாமென்று நினைந்து அவரையே நினையாநின்றது என்றவாறு.

1299. துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடைய

நெஞ்சந் துணையல் வழி

என்பது, உணர்ப்பு வயின் வாரா ஊடற்கண் தலைமகள்[1] சொல்லியது;

ஒருவருக்குத் துக்கம் வந்த காலத்து, அது தீர்த்தற்குத் தமக்கு உரித்தாயிருக்கிற நெஞ்சு துணையாகா விட்டால், வேறு துணையாவார் ஒருவருமில்லை என்றவாறு.


  1. தலைமகன் - பரிமேலழகர். உணர்ப்பு வயின் வாராவூடல் - தீர்க்கமுடியு மாறு வராத (அதாவது தீர்க்க முடியாத) ஊடல்.