பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

523

இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.

1307. ஊடலி னுண்டாங்கோர் துன்பம் புணர்வது

நீடுவ தன்றுகொ லென்று

என்பது இதுவுமது.

இன்பத்தைக் கொடுக்கின்ற இந்தப்பிணக்கின் கண்ணே எனக்கொரு துன்பமும் உண்டாகா நின்றது. இனிப்புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதுதலான் என்றவாறு.

1308. நோத லெவன்மற்று நொந்தாரென் றஃதறியுங்

காதல ரில்லா வழி

என்பது தலைமகன் கூற்று*

இவர் நம்முடைய நிமித்தமாக நொந்தார் என்று அந்த விசாரத்தை அறியும் அன்புடையார் இல்லாத போது, ஒருவர் விசாரப் படுகிறதனாலே என்ன பயன் என்றவாறு.

1309. நீரும் நிழல தினிதே புலவியும் வீழுநர் கண்ணே யினிது

என்பது இதுவுமது

பிராணனுக்கு வேண்டியிருக்கிற நீரும் நிழலிலே இருந்ததானால் மெத்தவும் நன்றாய்ச் சீவனுக்குத் தாகத்தையடக்கும்; அதுபோலப் பிணக்கும் அன்புடையவர்களிடத்திலே நல்லதாம்: அன்பில்லாதவர்களிடத்திலே நன்றாகாது என்றவாறு.

1310. ஊட லுணங்க விடுவாரோ டென்னெஞ்சங்

கூடுவே மென்ப தவா

என்பது இதுவுமது.

தான் பிணங்கி இருக்கவும், அதனைத் தீராமல் சும்மா இருக்கிறவருடனே கூட வேணுமென்று, என் நெஞ்சு முயலுதற்கு ஏது, ஆசை மாத்திரமே என்றவாறு


*உணர்ப்பு வயின்வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது என்பது பரிமேலழகர் துறைக் குறிப்பு