பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/541

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

539

இவைகளினின்றும் நீங்கி வீடு பெறுவதாகும்.

323 ஒன்றாகநல்லது (பக் 142)

ஒன்றாக-முதலாவதாக, கொல்லாமை-கொலை செய்யாமை, நல்லது - நன்று: அதன் பின்சார் - அதன் பிறகு சார்ந்த, அப்பொய்யாமை- அந்தப் பொய் சொல்லாமையும், மற்று-பிறவும் (கள்ளாமை, பெண்வழிச் சேறல், அவாவறுத்தல் ஆகியவைகளும் நன்று-நன்மையாகும். ஆசிரியர் பஞ்ச மகா விரதங்கள் ஐந்தையும் இந்தக் குறட்பாவில் விளக்கியுள்ளார்.

*பஞ்சமகா விரதம்: சிறிய கொலை பொய்கள வொடு காமம் பொருளைத் துறத்தலோ டைந்து என்பது அருங்கலச் செப்பு 86 ஆம் செய்யுள்

343 அடல்வேண்டும் (பக்கம் 148)

(மோட்சத்தை யடைபவர்) ஐந்தன்-பஞ்சேந்திரியங்களின் விஷயங்களுக்குரிய, புலத்தை - ஐம்புலன்களையும், அடல் வேண்டும் - கெடுத்தல் வேண்டும். (கெடுக்கும் போது) வேண்டிய வெல்லாம்-மனத்தினால் விரும்பப்படும் விஷயங்கள் எலலாவற்றையும், ஒருங்கு - ஒருமிக்க, விடல் வேண்டும்–வெறுத்து விடுதல் வேண்டும்.

346 யான் எனது

இதன் கருத்து, 'யான் எனது என்னும் அகங்காரத்தை யொழிபவன் தேவர்க்கும் அடைதற்கரிதாகிய மோக்ஷத்தை அடைவான்.

350 பற்றுக (பக்கம் 229)

பற்றற்றான் - எப்பொருள் களிடத்திலும் பற்றில்லாத அருகக்கடவுளின், (அதாவது அவரால் அருளிய) பற்றினை (சமயத்தரிசன ஞான சாரித்திரங்கள் என்னும் இரத்தினத் திரயங்களால் பெறுதற்குரிய மோக்ஷ மார்க்கத்தின்) விருப்பத்தை பற்றுக - (இதுவே நல்வழி யென்று மனத்தில்) கொள்ளுக;