பக்கம்:திருக்குறள் உரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் ___________________________________________________________________________



அறத்துப்பால்

பாயிரவியல்

1. கடவுள் வாழ்த்து

உயர் ஞானமும் வரம்பிலா ஆற்றலும் உடைய கடவுளைத் தொழுது ஞானத்தையும் ஆற்றலையும் பெற்று, எண்ணிய பணியை இனிதே முடித்திட விரும்பிக் கடவுளை வாழ்த்துதல்.

காணப்படுவதைக் கொண்டு காணப்படாத காரணங்களைக் கண்டுபிடிக்க, கடவுள் வாழ்த்து துணை செய்யும்.

உயிர் இன்ப துன்பங்களிலிருந்து விடுதலை பெறுதலே பிறவிக் கடல் நீந்துதல்.

வைகுந்தம், சொர்க்கம் எல்லாம் இந்த மானுட உடம்பிலேயே என்ற வள்ளலார் நெறி அறிக; உய்த்துணர்க.

1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக உடையன. உலகம் அம்மையப்பனை முதலாக உடையது. ஆதி பகவன் ஆற்றலாகிய சக்தியை பங்கிலே உடையவன்; முதல் தலைமை பற்றியது.

அகரம், எல்லா எழுத்துக்களுக்கும் முதல். மற்ற உயிர் எழுத்துக்களில் கலந்து நிற்பது, மெய் எழுத்துக்களை இயக்குவது. கடவுள் உலகத்திற்கு முதல். உயிர்களுக்கு உயிராக நின்று உணர்த்தி இயங்குவது; மாயையாகிய சடப்பொருளை இயக்கி, உலகத்தைத் தோன்றச் செய்வது. 1.

2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

கல்வியின் பயன் தூய அறிவினனாகிய கடவுளின் நல்ல திருவடிகளைத் தொழுதல்.

வாலறிவு - அறியாமைக் கலப்பில்லாத தூய அறிவு.

நற்றாள் - நன்மை பொருந்திய உயிர்களைத் தாங்கும் இயல்புடைய திருவடிகள்.

தூய அறிவினனாகிய கடவுளைத் தொழுதல் மூலம் உயிர் அறிவு நலம் எய்தும். உயிர் அறிவு மயமாதலே வீடு. இந்த அறிவு, ஞானம் என்று அழைக்கப்பெறும்.

தொழுதல் - வழிபடுதல் - வழிப்படுதல் - நெறிநிற்றல். 2.

__________________________________________________________________________ தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 11