பக்கம்:திருக்குறள் உரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறத்துப்பால்

__________________________________________________________________________



3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

உள்ளத் தாமரையின்கண் தங்கிய இறைவன் திருவடிகளை நினைந்து உணர்வால் ஒன்றானார், இந்நிலவுலகத்தின்கண் நெடுநாள் இன்புற்று வாழ்வர்.

சேர்தல் - நினைந்து இறைநெறியில் ஒன்றி நிற்றல். நிலமிசை - இந்நிலவுலகத்தின்கண்.3.


4. வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருப்பு வெறுப்பில்லாத இறைவன் அடிசேர்ந்தார்க்கு எங்கும் துன்பமில்லை.

இடும்பை - துன்பம். விருப்பு, வெறுப்பு துன்பங்களின் வாயில்கள்; விரும்பியது கிடைக்காத போதும் தாம் விரும்புவதையே பிறிதொருவர் விரும்பியபோதும், எல்லோருக்கும் கிடைக்காதபோதும் துன்பம் வருதல் தவிர்க்க இயலாதது. வேண்டாதது வந்தடைவதாலும், வெறுப்பதனாலும், வெறுக்கப்படுவர். வெகுண்டு எழுவதாலும் துன்பம் வரலாம். விருப்பும் வெறுப்பும் இல்லாத இறைவனைத் தொழுதலின்வழி அத்தன்மையை அடைதலால் துன்பமில்லை என்பதாம். 4.


5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவனின் பொருளுடைய புகழை விரும்பியவர்களை மயக்கம் செய்யும் நல்வினை, தீவினை வந்தடையா.

இருள் சேர்- அறியாமை வழிப்பட்ட "பொருள் சேர் புகழ்" பொருள் நிறைந்த - அர்த்தமுள்ள உண்மையான பயன் பொருந்திய புகழ்.

இறைவனின் புகழைச் சொல்லுதல் தன் முனைப்பை நீக்கும்; இறைவனைப் புகழ்தலால் யாரும் இகழப்படுவதில்லை. ஆதலால், அழுக்காறில்லை. எனவே வினைபடு வாயில்கள் தோன்றா. 5


6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்பொறிகளை -பொறிகளின் வாயிலாகிய புலன்களைப் பக்குவப்படுத்தி ஒழுக்க நெறியில் நிற்போர் நெடிய நாள் வாழ்வர். __________________________________________________________________________ 12 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை