பக்கம்:திருக்குறள் உரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்டால் 525. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தாற் சுற்றப் படும். ஒருவன் சுற்றத்திற்குக் கொடுத்தலும், இனிய சொல் சொல்லலும் வல்லவனாயின் தொடர்ந்து வரும் பல்வகைச் சுற்றத்தாலே சூழப்படுவான். கொடுத்தலும் இன்சொலும் அரிது. அதிலும் கொடுத்தலை விட இன்சொற் சொல்லுவது அரிது. ஒரோவழி அகநிலை உடன்பாடு இன்றியே கூடக் கொடுத்தல் நிகழும். ஆனால் இன்சொற் சொல்லுதல் அரிது. அடுக்கிய சுற்றமாவது சுற்றத்தார் அவர்தம் சுற்றத்தார் என்று சுற்றத்தாரின் எண்ணிக்கை விரிவடையும் என்றவாறு. 525. 526. பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குஉடையார் மாநிலத்து இல். ஒருவன் மிக்க கொடை கொடுப்பவனாகவும் வெகுளியைப் பேணாதவனாகவும் இருப்பின், அவனைப் போலச் சுற்றத்தால் சூழப்பட்டார் இவ்வுலகத்தில் இல்லை. 'பெருங்கொடை'- வறுமை நீங்குமாறு அளித்தல். ஒருவனுக்குப் பெருங்கொடை கொடுப்பவனாகவும் வெகுளி யில்லாதவனாகவும் உடைய ஒருவன் சுற்றமாக அமையின் அவனைப் போலப் பேறு பெற்றார் இந்நில உலகத்தில் இல்லை. 526. 527. காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. காக்கை இரையாயின கண்ட இடத்து மறையாது இனத்தை அழைத்துக் கூடி உண்ணும். இத்தண்மை உடையார்க்கே ஆக்கமும் (செல்வமும்) உண்டு. கூடி உண்பார்க்கு அழுக்காறிண்மையால் செல்வப்பாதுகாப்பும் கூடி உண்பதன் மூலம் சுற்றம் அமைவதால் செல்வ வளர்ச்சியும் உண்டு என்ற கருத்து அறியப் பெற்றது. 527. 528. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். அரசன் எல்லாரையும் போலப் பொதுவில் நோக்காது சுற்றத்தாரைத் தகுதி வரிசையில் வைத்துச் சிறப்புச் செய்வதன் காரணமாக அவனோடு சுற்றமாகக் கூடி வாழ்வார் பலர். எல்லாரும் சமம் என்பது இலக்கேயானாலும் சுற்றத்தாராய் அமைந்து செல்வ வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் துணையாய் அமைந்திருப்பார், முதல் நிலையில் பேணப்பட வேண்டும் என்று உணர்த்தியது. 528. 160 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை