பக்கம்:திருக்குறள் உரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 68. தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது. பெற்றோராகிய தம்மைவிடத் தமது குழந்தைகள் கல்வி யறிவுடையராயிருத்தல் இப்பெரிய உலகின் மக்கள் யாவர்க்கும் இனிது. வளர்ச்சியே இயற்கை. ஆதலால் “தம்மில் தம்மக்கள் அறிவுடைமை” என்றார். நாடு மொழி சமய எல்லைகள் கடந்தும் அறிவு பயன்படுவதால் "மாநிலம்’ என்றார். 68. 69. ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். தன்மகனை நல்லாண்மையுடைய சான்றோன் என்று உயர்ந்தோர் புகழ்ந்து கூறுவதைக் கேட்ட தாய் அம்மகனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள். ஒருவர் செய்த நற்செயல்களின் பயனைக் கண்டவர்கள் மனம் கலந்து பாராட்டிக் கூறுவது புகழ். - ஆசிரியர் காலத்தும் இண்றும் புறத்திணை - உலகியல், ஆண்மக்களால் நடத்தப்பெறுவதால் மற்றவர்புகழும் வாய்ப்பு:ஆண்மகனுக்கே உண்டு. ஆதலால் மகன்’ என்றார். ஒரோ வழி மகளுக்கும் உண்டு. பொது விதியன்று; சிறப்பு வழியேயாம். "புகழ்' என்பது கேட்பதற்குரியதே தவிர காண்பதற்குரியதன்று. தந்தையினும் தாய் மகிழ்தல் இயற்கை. அதனால், தந்தைக்கு மகிழ்ச்சியில்லை என்பது பொருளாகாது. ஆயினும், ஒரே புறத்திணையில் தந்தையும் மகனும் ஈடுபடுவதால் ஒரோவழி தந்தையுள்ளம் பொறாது. வறிதே தகப்பனானவன் மகன் புகழில் அழுக்காறு கொள்ளுதல் நிகழலாம். அல்லது மகன் தந்தையை விஞ்சியதாகக் கருதி தந்தையிடத்து மதிப்பில்லாதபடி ஒழுகும்பொழுது தந்தைக்கு மகிழ்ச்சி வராது. 69. 70. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். மகன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறாவது, 'இவனைப் பெறுவதற்கு இவன் தந்தை என்ன தவம் செய்தானோ?’ என்று வியக்கத்தக்க வகையில் நல்லவனாக, வல்லனாக சான்றோனாக நடந்து கொள்ளுதலேயாம். முந்தையோர் பெருமையில் வாழ்வது வளர்ச்சியைக் குறிக்காது. தாம் தமது அருஞ்செயல்களால் புகழுடையவராக வாழ்ந்து தம் குடும்பப் புகழை வளர்க்க வேண்டும். வளர்ந்து வரும் குடும்ப ஆய்வு "அவரில்' தொடங்காமல் இவரில்” தொடங்கும். 70. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 29