பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உடையர் எனப்படுவது...!

உடை-ஆடை, உடைமை-அணிகலன், உடையவர் -உடையவனாம் தன்மை என்றாகும். இதைப் பொருளின் மேல் ஏற்றிச் செல்வம் என்றும், அதனையுடையவர் செல்வர் என்று கூறுவதுண்டு.

வாழ்வுக்கு ஏற்றது பொருளுடைமை என்றும், அதுவும் தனியுடைமை நல்லதா? பொதுவுடைமை நல்லதா? என்றும் மக்கள் ஆராய்ந்து வருகின்றனர். “வாழ்வுக்கு வேண்டியது பொருளே” அல்ல” என்பது வள்ளுவர் கருத்து என்று தெரிகிறது.

நாட்டுக்கு என்று சில உடைமைகளும், வீட்டுக்கு என்று சில உடைமைகளும் உள்ளனபோல, வாழ்வுக்கு என்று சில உடைமைகளும் உள்ளன என்று வள்ளுவர் கருதுகிறார். அவர் அவைகளைத் துருவித்தேடிக் கண்டுபிடித்து எடுத்து, முறைப்படுத்தி, வகைப்படுத்தி, தொகைப்படுத்தி நமக்குத் தந்துள்ளார். அவை அன்புடைமை, அருளுடைமை, அடக்கமுடைமை, ஆள்வினையுடைமை, ஊக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நாணுடைமை, பொறையுடைமை, பண்புடைமை என்பன. இவ்வுடைமைகளிற் பொருளுடைமை சேராமை காண்க. நிறைந்த செல்வத்தைப் பெற்றுப் பெருவாழ்வு வாழ்வாழ்கின்ற வாழ்வு எதுவும் நல்வாழ்வாகாது என்பதும், மேற்கண்ட உடைமைகள் பத்தும் பெற்று வாழ்கின்ற வாழ்வே நல்வாழ்வு ஆகும் என்பதும் வள்ளுவரதுமுடிவு.

இவ்வுடைமைகள் ஒவ்வொன்றுக்கும் பத்துப் பத்துப் புள்ளிகள் வைத்தால், முழு மனிதப்பண்பு நூறு புள்ளி