பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
108


சொல்வது யாருக்கும் எளிது; அதனைச் செய்து முடிப்பதில்தான் சிரமம் இருக்கிறது. வாய்ச்சொல் பயன் தாராது.

வினைத்திட்பம் ஆளுமையைத் தரும்; எதனையும் செய்து முடிக்க இயலும், எண்ணியது கிட்டும்; கருதியது முடிக்கலாம்.

இவனால் என்ன முடியும் என்று ஆளைக் கண்டு எடை போடாதே; தேருக்கு அச்சாணி சிறிதுதான்; அதனைப் போலப் பயன்படுவார் உளர்.

வெற்றி தரும் என்று திட்டமிட்டுச் செயலில் இறங்கிய பிறகு சோம்பிக் கிடக்காதே; காலத்தை வீணாக்காதே; தொடர்ந்து செயலில் இறங்குக.

துன்பம் மிக்கு வந்தாலும் எடுத்த வினையைத் தளர விட்டுவிடாதே; அதனால் நன்மை உண்டாகும் என்று தெரிந்தால் செயற்படுத்துக.

செயலாற்றலுக்கு உறுதி காட்டாதவரை உலகம் மதிக்காது; வாய்ச்சொல்லில் வீரம் காட்டினால் போதாது; வினை செய்வதில் உறுதி காட்டவேண்டும்; மனக் கோட்டை கட்டிக்கொண்டு மவுனம் சாதிப்பவரை உலகம் ஏற்காது.

68. வினைசெயல் வகை
(செயல் செய்யும் திறம்)

முதலில் நீ செய்யும் தொழிலைப்பற்றி நன்கு ஆராய்ந்து முடிவு செய்க, தீர்மானித்தபின் செயற் படுத்துக; காலதாமதம் செய்யவேண்டா.