பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
114


அரசன் வயதில் இளையவனாக இருந்தாலும், அவன் மதிப்புக் குறைந்தவனாகப் பட்டாலும் அவனை மதிக்கக் கூடாது என்று கருதாதே; அந்தப் பதவிக்கு மதிப்புக் கொடுத்து அடக்கமாக நடந்துகொள்க.

“அரசன் நன்மதிப்பு நமக்கு இருக்கிறது; அவனை நம் கைக்குள் போட்டுக்கொண்டு இருக்கிறோம்” என்று கருதிக் கொண்டு எதனையும் செய்துவிடலாம் என்று முற்படாதே.

இளமை முதல் பழகியவனாக இருக்கலாம்; தான் பழைய ஆள் என்ற தெம்போடு எப்படியும் பழகலாம் என்று தகாத செயல்களில் ஈடுபட்டு நட்புரிமையை நாட்டாதே. பழக்கம் வேறு; பதவி வேறு; பதவிக்கு மதிப்புக் கொடுப்பது அழகு. அதிகமாகப் பூசிக்கொள்வது விபரீதத்தை உண்டாக்கி விடும்.

71. குறிப்பு அறிதல்
(மன்னனது குறிப்பை அறிதல்)

அரசன் தான் கருதியதை வரிசைப்படுத்தி அமைச்சனுக்குக் கூறத் தேவை இல்லை; நா அசைவதை விடக் கண் அசைவு அதுவே போதும்; அஃது ஆற்றல் மிக்கது. அந்தக் குறிப்பை அறிய நுண்ணுணர்வு தேவைப் படுகிறது; அத்தகைய அறிவு படைத்தவன் பிறரால் மதிக்கப்படுவான். அவனே அமைச்சன் ஆவதற்குத தகுதி படைத்தவன் ஆகிறான்.

மற்றவர் என்ன நினைக்கிறார்? அதனைத் தெளிவாக அறிந்துகொள்ளும் ஆற்றல் நுட்ப அறிவு உடையவர்க்கே அமையும்; அவர்களைத் தெய்வத்துக்கு நிகராக மதிப்பர்.