பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
174


“முன்பின் அறியாதவள்போல் அன்பின் உளத்தினள்; என்னைப் பொதுநோக்கில் பார்த்தாள்; மற்றவர் அவள் உள்ளக் குறிப்பை அறியமுடியாதபடி மறைத்துக் கொண்டாள். ஏதிலார்போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலரிடத்தே உள்ளது.”

“கண்ணோடு கண்ணிணை நோக்கு ஒத்துப் போனால் வாய்ச்சொற்களுக்கே வேலை இல்லை; மவுனகீதம் பாடின அவள் கண்கள்; அவள் மனக்குறிப்பை விழியாலேயே உணர்த்திவிட்டாள்.”

111. புணர்ச்சி மகிழ்தல்

தலைவன் கூற்று

“இஃது அவள் முதற் சந்திப்பு: அவளைப் பார்ப்பதே இன்பம்; அவள் பேசுவதைக் கேட்பதில் இன்பம்; அவள் இதழ்ச்சுவை தேன்; சுவைத்தேன். முகர்வதற்கு அவள் பூ மணம்; தொட்டால் துவள்கிறாள்; அணைத்துக் கொண்டாள்; அடடா இன்பத்தின் எல்லை. கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புல இன்பமும் என் பேரழகியிடம் காண்கிறேன். புலனை அடக்கினால் புத்தி தெளியும் என்பர்; அதனை முடக்காமல் அவளை அடைந்தால் ஐந்து புலன்களுக்கும் இன்பம் கிடைக்கிறது. இங்கே புலன்கள் ஒருமுகமாக அடங்கிப் புகுமுகம் புரிந்து புது இன்பம் பெறுகிறது. புலன்கள் அவளிடத்தில் அடங்கிவிடுகின்றன. அவள் தரும் நலன்கள் இன்பப் பேறாக அமைகின்றன.”

“கிள்ளியும் விடுகிறாள்; தொட்டிலை ஆட்டித் தூங்கவும் வைக்கிறாள். என்னைத் தூண்டியதும் அவளே: யான் வேண்டியது தருபவளும் அவளே.