பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9

உறுதிபடைத்த நெஞ்சு. அதனை நிறை என்றும் கூறுவர். அத்தகைய பெண் இல்வாழ்க்கைக்குப் பெருமை சேர்க்கிறாள்.

அவள் தெய்வத்தைத் தொழத் தேவையே இல்லை; கொழுநனைத் தொழுது எழுந்து பின் தன் கடமையில் ஆழ்கிறாள். அத்தகையவள் ‘மழை பெய்க’ என்று கூறினால் வான்மழையும் தானாகப் பெய்யும். தெய்வமும் அவள் ஏவல் கேட்டு அவளுக்குக் காவல் புரியும்.

அவள் முதலில் தன்னைக் கற்பினின்று தவறாமல் காத்துக்கொள்கிறாள்; கணவனுக்கு உற்ற துணையாக நின்று பணி செய்து உதவுகிறாள்; கணவனின் புகழுக்கு உறுதுணையாக நிற்கிறாள்; சோர்வு என்பது அவளிடம் தலை காட்டுவது இல்லை. இந்த நான்கு நற்பண்புகளும் அவளிடம் அமைதல் வேண்டும்.

கற்பு என்று சொல்லி அவளுக்குக் காவல் வைத்தால் அஃது அற்பத்தனமாகும்; அவள்மீது நம்பிக்கை இல்லை என்பதாக அமையும்; அவளை இழிவுபடுத்துவதாகவும் அமையும். அஃது அவள் சொந்தப் பொறுப்பு: பிறர் வற்புறுத்தி அமைவது இல்லை. சிறையிட்டுக் காப்பது அநாகரிகம்; அடிமைப்படுத்துவதும் ஆகும்; அவள் நிறையை அவளே காப்பது அவளுக்கு உயர்வு தரும். நம்பிக்கைதான் இருவரையும் பிணைக்கும் கயிறு.

அன்பை வளர்ப்பது இல்வாழ்க்கை; கணவனிடம் அன்பும் அடக்கமும் காட்டி இன்பம் கொழிக்கச் செய்பவள் வாழ்க்கைத் துணைவி; கணவனின் நன்மதிப்பையும் அன்பையும் பெற்று அவள் உயர்வுபெறுகிறாள்; வானவரும் அவளை வாழ்த்தி வரவேற்பர்.