பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
41


தட்டு நிறையச் சோற்றைப் போட்டுக்கொண்டு மிச்சம் வைக்காமல் தனித்து உண்பவன் பிச்சை எடுத்து உண்பவனைவிட இழிந்தவன் ஆவான்; பிச்சைக்காரர் உள்ளம் வஞ்சமற்றது; பிறருக்குத் தரக்கூடாது என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.

சாவது கசப்புதான்; அதுவும் சில சமயம் இனிப்பாக மாறுகிறது. எப்பொழுது பிறர்க்கு ஈய முடியாத இழிநிலை ஏற்படுகிறதோ அப்பொழுதே அவன் உலகுக்குப் பயன் படாதவன் ஆகிறான்; மண்ணுக்கு வீண் சுமையாகி விடுகிறான்.

24. புகழ்

புகழ் என்பதே ஈகையால் வருவது; அதுவே உயிர் வாழ்வுக்கு நன்மை தரும்.

பிறர் உன்னைப் புகழ்ந்து பேச வேண்டுமென்றால் அவர்கள் உன் செல்வத்தையோ சாதனைகளைப்பற்றியோ சிறப்பித்துப் பேசமாட்டார்கள். நீ பிறர்க்கு உதவுவதைத் தான் புகழ்ந்து பேசுவார்கள். புகழே கொடையால்தான் அமைகிறது.

முத்து ஈனும் நத்தை தான் அழிவதற்கோ சாவதற்கோ தயங்குவதில்லை; வித்தகர்களும் புகழுக்காகத் தம்மை அழித்துக் கொள்வதற்கு அஞ்சுவது இலலை; புகழுக்காக எதனையும் இழக்கத் துணிவர்.

இந்த உலகத்தில் நிலைத்து நிற்பது புகழ்தான்; மற்றவை மாறிவிடும்; சில மறைந்துவிடும்.