பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62

நினைத்து அவற்றின்பின் பலர் ஓடுகின்றனர். கானல்நீரை நம்பி, அது நிஜம் என்று சென்றால் நம் வேட்கை தீராது. மெய்ப்பொருளைக் காணும் வேட்கை எழுந்தால் ஆசைகள் அறுகின்றன; மனமும் தூய்மை பெறுகிறது.

அறத்திற்குக் கட்டுப்பட்டு வேட்கைகளைக் குறைத்துக் கொண்டு நாள்களைப் போக்குவது நல்லது. இன்பங்களை விரும்பி ஆசைகளுள் சிக்கி அல்லல் உறுவது அறியாமை.

துன்பத்திற்குக் காரணமே ஆசைகள்தாம்; அவற்றை அறுத்து மெய்ப்பொருளை நாடிப் பற்றற்ற நிலைக்குச் சென்றால் அஃது இன்பம் தரும்; அவ் வின்பம் நிலையானது ஆகும்.

“ஆசைக்கு ஒர் அளவே இல்லை” என்று கூறுவர். அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தால் நிரந்தரமான இன்பம் வாய்க்கும்.

38. ஊழ்

ஊழ் என்பது நம்மைச் சூழ்ந்துவரும் எதிர்பாராத சக்திகளின் செயல்; சூழ் என்ற சொல்லின் திரிபே ஊழ் என்பது ஆகும்; சூழ்நிலைதான் திரிந்து ஊழ் என்று திரிந்தது.

ஆவதற்கும் இந்தச் சூழ்நிலைதான் காரணம்; அழிவதற்கும் அதுவே காரணம் ஆகும். ஆகவேண்டும் என்று இருந்தால் சுறுசுறுப்புத் துணை செய்யும்; அழியவேண்டும் என்று இருந்தால் சோம்பல் இழுத்துப் பிடிக்கும்.

அறிவு ஆக்கம் தரும்; அறிவின்மை இழப்பைத் தரும்; அதற்கும் இந்தச் சூழ்நிலைகள்தாம் காரணம் ஆகும்.