பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
71

வரும் தொலைக்காட்சி செவிச் செல்வத்தையும் தருகிறது. செவிவழிக் கல்வியை வானொலியும் தருகிறது. ஒளியும் ஒலியும் மக்களால் விரும்பி வரவேற்கப்படுகின்றன.

43. அறிவுடைமை

அறிவு என்பது தற்காப்புக்குப் பயன்படுகிறது. அது நுட்பமானது; அதே சமயம் கூர்மையானது; வலிமை மிக்கது; எதிரிகள் அதனைக் கொள்ளைகொண்டு போக முடியாது; அஃது ஒருவன் உடைமையாகும்.

அறிவு சிதறக் கூடாது; நன்மையில் அதனை நிறுத்த வேண்டும். தீயதன்கண் நாட்டம் சென்றால் அதனைக் கட்டுப்படுத்துவது அறிவு. அறிவு என்பது நூல்பல கற்பதால் வரும் என்று சொல்வதைவிடக் கேள்விகள் சில கேட்பதாலும் வருகிறது. அது யார் சொன்னாலும் எத்தகையதாக இருந்தாலும் அதன் உண்மையை அறிந்துகொள்ள முயலவேண்டும்.

நாம் பிறரிடம் எடுத்துச் சொல்லும்போது புரியும்படி பேச வேண்டும்; பிறரும் அவ்வாறே நம்மிடம் பேசுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்கள் கூறுவது தெளிவாக இல்லாமல் இருக்கலாம்; அதனை விளங்கிக்கொள்வது நம் கடமையாகும். எப்பொழுதும் நாம் எளிய சொற்களைக் கொண்டு சுருக்கமாகக் கூறி எதனையும் விளக்க முயல வேண்டும்.

நாம் நினைப்பதே சரி என்று நம் விருப்பப்படி நடந்து கொள்வது அறிவு அற்ற செயலாகும். உலகம் எது தக்கது என்று நினைக்கிறதோ அதனை அறிந்து தெளிந்து அதன்படி நடந்துகொள்வதுதான் அறிவுடைமைக்கு அறிகுறியாகும்.