பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80

கவிழ்ந்துபோக நேரிடும். பிறர் உதவியைத் தேடித் தாராளமாக நடந்துகொண்டால் சேர்த்துவைத்த சேமிப்பு பூஜ்யம் ஆகிவிடும். எதுவும் உன் சக்திக்கு மீறிய செயல்களில் ஈடுபட்டால் உழைப்பும் உறுதியும் முயற்சியும் எல்லாம் பாழாகிவிடும். யாருக்குமே நன்மை கிடைக்காமல் போய்விடும்.

49. காலம் அறிதல்

கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடுகிறது. வலிமைமிக்கது கோட்டான் என்றாலும் அது காக்கையிடம் தோற்றுவிடுகிறது. காரணம் காலம் காக்கைக்குத் துணை செய்கிறது.

அதே போலப் பகைவரை வெல்லக் கருதுபவர்கள் அதற்கு உரிய காலத்தை ஆராய்ந்து தெளிந்து செயலில் ஈடுபட வேண்டும். கருவியும் காலமும் இயைந்தால் கருதியது கைகூடும்.

அன்றாட நடைமுறையில் எந்தக் காலத்தில் எதனைச் செய்யவேண்டுமோ அதனைக் காலமறிந்து செய்ய வேண்டும். எதனையும் தள்ளிப் போட்டுக்கொண்டு சென்றால் தேக்கம் ஏற்பட்டுவிடும். அவசரப்பட்டு எதனையும் செய்துவிடக் கூடாது. ‘பருவமறிந்து பயிர்செய்’ என்பது பழமொழி; அவர்கள் செல்வம் சிதையாது; விழிப்புணர்வு அழிவினைக் காப்பாற்றும்.

காலமும் ஆராய வேண்டும்; தக்க இடமும் தேர்ந்து எடுக்க வேண்டும், அவர்கள் எந்தக் காரியத்தையும் செய்து, சாதிக்க முடியும்.