பக்கம்:திருக்குறள் செய்திகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
81


ஊக்கம் உடையவர் சில சமயம் ஒடுங்கி இருக்க வேண்டும்; தக்க சமயம் அறிந்து செயல்பட வேண்டும். ஆட்டுக்கிடாய்கூடப் பின்னால் இடம்வாங்கித் திடீர் என்று முன்சென்று தாக்கும்; இது செயல்திறம் ஆகும்.

அறிவுடையவர்கள் அவசரப்படமாட்டார்கள்; ஆவேசமும் கொள்ளமாட்டார்கள்; ஆர அமரச் சிந்தித்துச் செயல்படுவர்; எவ்வளவு கோபம் இருந்தாலும் அதனை உள்ளுக்குள்ளேயே வைத்துத் தக்க சமயத்தில் செயல் படுவர்.

பகைவரைக் கண்டால் பொறுத்துக்கொள்க; அவர்களுக்கு அழிவு காலம் வரும்; அவர்கள் தாமே அழிந்து விடுவர். காலம் எதனையும் சரியாக முடிவு செய்யும்.

அரிய வாய்ப்புக் கிடைத்தால் நெகிழவிடக்கூடாது; காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் ஒரு முறைதான் வரும்; அதனைப் பயன்படுத்துவதில்தான் ஒருவரின் றிறமை இருக்கிறது.

பொறுத்திருக்க வேண்டிய காலத்தில் பொறுமையாக இருந்து எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். காலம் வரும்போது உடனே செயல்பட்டு அதனைச் சாதிக்க வேண்டும். கொக்கு அசையாமல் கூம்பி இருக்கும். தக்க இரைவந்தால் உடனே அதனைக் கவ்வி விடும். “ஓடுமீன் ஓட உறுமின் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு” என்பர். அதுபோலத் தக்க சமயம் வாய்க்கும்வரை காத்திருந்து ஏற்ற சமயம் வாய்க்கும் போது துரிதமாகச் செயல்பட்டு வெற்றி பெறவேண்டும். காலத் தேர்வு போலவே இடத் தேர்வும் செயல்திறனுக்கு அடிப்படையாகும்.

6.