பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘கயிலரகவல்’ திரு.வி.க. கருத்து

திருவள்ளுவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். தாய் மொழியை நன்கு பயின்றவர். அவர் அந்த நாளில் தமிழ் நாட்டிற் புகுந்த பிராகிருதம், பாலி, சமஸ்கிருதம் முதலிய மொழிகளிலுள்ள நூல்களையும் பயின்றிருப்பர்.

திருக்குறளை ஆய்ந்து பார்த்தால், அது கலைப் புலமை கடந்த இயற்கைப் புலமையால் முகிழ்த்த தெள்ளறிவினின்றும் பிறந்ததென்பது விளங்கும். ஆராய்ச்சியாளர், சாதி வெறி, மதவெறி, மொழி வெறி முதலிய வெறிகளற்றவராய் இருத்தல் வேண்டும்.

நாடு தனது பழங்கொள்கையினின்றும் வீழ்ந்து, சாதிவெறி, மதவெறி, மொழி வெறி முதலிய சிறுமைகட்கு இரையானபோது, அவ் வவ்வெறியர்கள் திருவள்ளுவரைப் பற்றிப் பலப் பலவாறு கீறலாயினர். வெறி ஏறிய மதியில் உண்மை விளக்குங் கொல்?

வெறியற்ற மதிகொண்டு திருக்குறளை ஆராய்க. ஆராய்ந்தால், திருக்குறள் மரபு கடந்த ஒரு நூலாகவே விளங்கும்.

குறிப்பு :- இப்பொழுது வழங்கப்படும் திருவள்ளுவர் வரலாறு, கபிலரகவலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

இக் கபிலரகவல், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த திருத்தணிகை வீர சைவப் புலவர் சரவணப் பெருமாள் ஐயராலும், விசாகப் பெருமாள் ஐயராலும் செப்பஞ் செய்யப்பட்டதென்று சொல்லப் படுகின்றது.

இதை முதல் முதல் எனக்குச் சொன்னவர் பாம்பன் குமர குருதாச சுவாமிகள் அருளிய செவியறிவு றுஉ என்னும் நூலில் 67-ஆம் பக்கத்தில், இதைப் பற்றிய குறிப்புச் சுருங்கிய முறையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.

பத்திரகிரியாரால் குறிக்கப் பெற்ற, கபில காவியம்' வேறு இங்கே குறிக்கப் பெற்ற கபிலரகவல் வேறு.

- தமிழ்த் தென்றல் திரு.வி.க. (குறளமுதம், தமிழ் வளர்ச்சி இயக்ககம் வெளியீடு, 1.1.2000)