பக்கம்:திருக்குறள் சொற்பொருள் சுரபி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 217

இனி, அகம் புறம் எனும் இருபொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின், இவ்வாறு நூற்பயன் நான்காகக் கொள்வது வடவர் முறை அன்றோ எனின், அன்று. கடல் கொண்ட குமரி நாட்டு முதற் கழகத்தார். உலகுக்கு முதற்கண் அருளிய தமிழ் நான்மறை என்பது அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் பற்றியதன்றோ?

அந் நான்கனுள் அறமாவது தமிழ்ச் சான்றோர்களால் தமிழ் நான்மறை முதலிய நூற்களில் செய்க என்றவற்றைச் செய்தலும், மனு முதலிய நூற்கள் கூறியவற்றை விலக்கலுமாம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும். அவற்றுள் ஒழுக்கமாவது, அறம் எனச் சொல்லியவற்றினின்று வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது ஒரு பொருள் மேல் என்னுடையது என்னுடையது” என இருவருக்கு ஏற்படும் மாறுபாடு காரணமாகத் தொடர்வது. அது கடன்படல் முதல் பதினெட்டுப் பிரிவுகளையுடையது.

தண்டமாவது அக ஒழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழுவினோரை அந்நெறி நிறுத்தற் பொருட்டு ஒப்ப நாடித் தக்கவாறு தண்டித்தல். தண்டு - கோல், தடி அதனடியாகப் பிறந்தவை. தண்டம் - தண்டனை - தண்டித்தல், தூய தமிழ்ச் சொற்கள்.

அறமும் வழக்கும் தண்டமும் அறமேயாயினும் அறநூற் செய்த தமிழ்ச் சான்றோர் பின்னிரண்டையும் மன்னன்பால் அளித்து முறை செய்யச் சொல்லியருளுவார். மற்றயை அறமேயும் இல்லறம், துறவறம் என்னும் இருவகைத்தாதலின் அவற்றுள் இல்லறத்தை முதற்கண் கூறுவான் தொடங்கி அனைத்தும் நிகழ்தற்குரிய உலகின் தோற்றத்தை ஈண்டுக் கூறுகின்றார்.

அறத்துப்பால்

அதாவது அறத்தைக் கூறும் பகுதி. இரண்டனுருபும் பயனும் உடன் தொக்க தொகை,

அதிகாரம் 1. உலகின் தோற்றம்

அதாவது உலகாகிய இடம், உலகத்து உயிர்கள், அவற்றின் நிலை ஆகியவை தோன்றும் முறையாம்.

அகர முதல வெழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே யுலகு என்பது பாட்டு.

"அகரம் முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்று ஏ உலகு"

என்பது அப்பாட்டின் சொற்களைப் பிரித்துரைத்து.